• வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்"
- வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" - மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" என்ற நிகழ்வின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 164 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஐயங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது.
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் படிக்கும் படிப்பு தான் நம் வாழ்க்கையின் அடித்தளம் ஆகும். இந்த வகுப்புகளில் நன்றாக படித்தால் நம்வாழ்வில் அடுத்த நிலை சிறப்பாக அமையும். இந்த வகுப்புகளில் செம்மையான படித்தால் வெற்றி நம் வசமாகும் என தெரிவித்தார்.
மேலும் இந்திய குடிமை பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், NEET பயிற்சி வகுப்புகள், மத்திய சட்ட பல்கலை கழகங்களுக்கான ஒருங்கிணைந்த சட்ட நுழைவு தேர்வு (CLET), ஐஐடி மற்றும் என்.ஐ.டி ஆகியவற்றில் பயில்வதற்க்கான ஜே.இ.இ. தேர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
மருத்துவராக என்ன செய்யவேண்டும் என வினவிய மாணவ, மாணவிகளுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் படிப்புகளை தேர்வு செய்து NEET நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. நம்முடைய மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலும், சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலும் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர். எனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 7.5 சதவீத இடஓதுக்கீடை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தனக்கு வழக்கறிஞராக ஆசை இருப்பதாக தெரிவித்த மாணவியிடம் தமிழ்நாடு அரசின் சட்ட கல்லூரிகளில் பயில்வதற்கு 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று 5 வருட சட்ட படிப்பை பயிலாம். மத்திய சட்ட பல்கலை கழகம் மற்றும் தேசிய சட்ட மையங்களில் பயில ஒருங்கிணைந்த சட்ட நுழைவு தேர்வு (CLET) எழுதி தேர்வாக வேண்டும் என தெரிவித்தார்.
தனக்கு வேதியியல் பாடம் கடினமாக இருப்பதாகவும், அந்த பாடம் பயமாக இருப்பதாகவும், தாங்கள் (மாவட்ட ஆட்சியர்) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது உங்களுக்கு கடினமாக இருந்த பாடம் எது என்று வினவிய மாணவனிடம் எனக்கு பொதுவாக கணித பாடம் சற்று கடினமாக இருக்கும். எனினும் நான் 10-ஆம் வகுப்பில் கணிதத்தில் 100க்கு 99 மதிப்பெண் எடுத்ததாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணித பாடத்தை தவிர்த்துவிட்டு பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகளில் படித்தேன். பிறகு சென்னையில் இளங்கலை படிப்பு (பொருளாதாரம்) முடித்து புனேவில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு (பொருளாதாரம்) பயின்றேன். முதுகலை படிப்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கணித பாடங்கள் தான் அடிப்படை என கல்லூரி பேராசிரியர் தெரிவித்தார். அதனால் புனேவிலேயே கணிதத்திற்கு தனி வகுப்பு சென்று படித்தேன். இதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நம் வாழ்வில் நாம் எதை கண்டு பயந்தோமோ அதை நாம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எந்த பாடத்திட்டத்தை பற்றியும் பயமின்றி நன்றாக படித்தால் எளிதில் புரிந்து கொண்டு நல்ல மதிப்பெண் பெறலாம் என தெரிவித்தார்.
இதேபோன்று காவலர் தேர்வு, ISRO வில் பணிபுரிய படிக்க வேண்டிய படிப்புகள், ஐடிஐ, டிப்ளோமோ, பொறியியல், செவிலியர் போன்ற படிப்புகள் குறித்து ஐயங்கள் எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு அது தொடர்பான விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் தங்கள் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை எனவும், பள்ளி பகுதியில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்விரு கோரிக்கைகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் விருப்பாட்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 3 வருடங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர் ஹேமலதா பாராட்டி புத்தகம் வழங்கினார். மேலும் இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பிரியதர்ஷினி, சிலம்பம் போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்ட மாணவி சந்தியா, மண்டல அளவில் தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவி மோனிஷா, ஆகிய 3 மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சத்யா பிரபா (பொ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment