• புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய்.

·        ரூ.2.50  கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்  தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  நீர்வள துறை அமைச்சர் அர்ப்பணித்தார்.

 ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்  தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கீ.வ குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்முட்டுக்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ப்பணித்தார்.

தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் விவரம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கீ.வ குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தொலைக்கல் 0 மீ முதல் 31840 மீட்டர் வரை தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

                மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் 31.84 கி. மீட்டர் தொலைவு பயணித்து 7 ஏரிகளுக்கும்,  19 கிராமங்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 1710.92 ஹெக்டேர் நிலம் பாசனம் பெரும் வகையில் உள்ளது.

                மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தூர்ந்து மற்றும் அடர்ந்து செடி கொடிகள் வளர்ந்துள்ள நிலையில், வெள்ள காலங்களில் அணையில் தண்ணீர் திறக்கும் போது கால்வாயில் தண்ணீர் சீராக செல்லாமல் சில இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயமும், கால்வாயில் கடைமடை வரை செல்லாத நிலையிலும் இருந்தது. தற்போது இக்கால்வாயினை தூர்வாரி கால்வாயின் தரைமட்ட படுகையினை சீரமைத்து தண்ணீர் கடைமடை வரை செல்ல வகை செய்யப்பட்டுள்ளது.

இக்கால்வாயில் வெள்ளக் காலங்களில் கரை உடையும் அபாயம் உள்ள 8 இடங்களில் வெள்ள தடுப்பு சுவர் அமைத்தும், கால்வாயின் கரையில் மண் கொட்டி பலப்படுத்தப்பட்டும்,  கால்வாயின் கரையில் நீர்க்கசியும் இடங்களில் கான்கிரிட்டால் தரை அமைத்தும்,  பாதிப்படைந்த ஈர்ப்பு சாலையில் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளது. மேற்காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயில் உள்ள 7 ஏரிகளுக்கும் மற்றும் 19 கிராமங்களுக்கு கடைமடை வரை தண்ணீர் சீராக சென்று நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 1710.62 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி உறுதி செய்யப்பட்டு,  11000 நபர்கள் பயன்பெறவும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது,

மோர்தானா அணை என்பது குடியாத்தத்திற்கும், ஆந்திர மாநில எல்லைக்கும் இடையே உள்ள ஒரு அணை.  இந்த அணை  பெரிய பொருட்செலவில் ரூபாய் 100 கோடி மதிப்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பொழுது கட்டப்பட்ட அணை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுதும் சரி, தற்போது நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்திலும் சரி நீர்ப்பாசன துறையை கேட்டு பெறுகிறேன்.  அதற்கு காரணம் விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே. கலைஞர் ஆட்சி காலத்தில் நான் அமைச்சராக இருந்த பொழுது தான் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளுக்கு இலவசம் மின்சாரத்தை வழங்கினேன்.

இந்தியாவிலேயே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு அரசுதான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளது. நம்முடைய வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டில் மட்டும்தான் அணை இல்லை அங்கு கூட மேலரசம்பட்டில் மூன்று மாத காலத்தில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேல்மாயில் பகுதியில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள இடத்தை நீர்வளத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அங்கு குளம் அல்லது தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு செய்து எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை தெரிவித்தால் அதற்கான நிதியை துறையின் மூலம் செய்து தருகிறேன்.

இது மட்டுமின்றி வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  அதில் முக்கியமான ஒரு திட்டம் தான் விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கும் திட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் 51 ஆண்டுகளுக்கு மேல சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக பணியாற்றியுள்ளேன். தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு அமைச்சராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இந்த காலகட்டங்களில் பாலாற்றில் மட்டும் 13 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு கரையோரங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து விவசாயத்திற்கான போதுமான தண்ணீரும் கிடைக்கிறது.

நீர்வளத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று கூட சென்னை மாநகரில் காலம் ஆற்றிலிருந்து வெளியேறும் மழை நீர் வங்க கடலில் கலக்கும் வகையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. அதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மழையின் போது அனைத்து அணைகளும், கரைகளும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மூன்றே மாத காலத்தில் அனைத்தும் சீரமைக்கப்பட்டன. தஞ்சாவூர் விவசாயத்திற்கு பெயர் போன மாவட்டம்.

அந்த மாவட்டத்தில் நரம்பு மண்டலம் போன்று கால்வாய்கள் படர்ந்து கிடக்கும். அந்த கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  பொது மக்களும், விவசாயிகளும் அரசுக்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒரு சில இடங்களில் மழை காலங்களில் தண்ணீரை பெறுவதற்காக கால்வாய்களை உடைத்து விடுகிறார்கள். அது போன்று தவறுகளை விவசாயிகளும், பொதுமக்களும் செய்யக்கூடாது. தண்ணீர் தேவை என்றால் எங்களிடம் கூறுங்கள். அதற்கான திட்டத்தை உருவாக்கி உங்கள் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர வழிவகை செய்கிறோம்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு அரசுதான் உள்ளது என மத்திய அரசே சான்றிதழ் அளித்துள்ளது. அதற்கு காரணம் நம்முடைய முதல்வர் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகையும், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பெயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று கேட்டு அதனை நிறைவேற்றும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தையும், பொதுமக்களுக்கு அவர்களுடைய பகுதியிலேயே சிகிச்சை அளிக்க ஏதுவாக 17 உயர் சிகிச்சைகளை வழங்கு வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தையும் நடத்தி வருகிறார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கு மனுக்களை அளிக்கலாம். மனுக்களை மட்டும் நீங்கள் அளித்தால் போதும். அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிந்தவரை அனைத்து மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத்தொகை கூடிய விரைவில் வழங்கப்படும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், கீ.வ. குப்பம் ஒன்றிய குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரெ.தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அசோக்குமார், ஒன்றிய குழு துணைதலைவர் பாரதி வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீதாராமன், ஜெயா முருகேசன், வேலு, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.