• வேலூர் ஊரிசு கல்லூரியில் நாளை தமிழ் கனவு பண்பாட்டுப் பரப்புரை.

·        வேலூர் ஊரிசு கல்லூரியில் 06.08.2025 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை.

·        கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் உயர்கல்வி துறையுடன் தமிழ் இணைய கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை  சிறப்பாக நடத்தப்பட்டன.   இதன்100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும், எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

                தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

                அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ் கனவு’ பரப்புரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 2 லட்சம் மாணவர்களை சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

                ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமிதங்களைப் பறை சாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் ஆளுமைகள் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின்  பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

                மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன.

                இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, ’தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன.

                  தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டி சான்றிதழ்களும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்படும். சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பெறவுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 06.08.2025 அன்று ஊரிசு கல்லூரியில் டிபோர் வளாகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டுப் பரப்புரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் அருள்மொழி, கலந்து கொண்டு ‘தமிழ்நாடு கண்ட புதுமை பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.  

‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

               

 

Comments