• முடி திருத்தும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்.
· முடி திருத்தும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் - நலத்திட்ட உதவிகள்.
· மனிதநேயம், ஆரோக்கியம், வாழ்க்கைக்கு முக்கியம் - வி.ஐ.டி. துணைதலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம் வலியுறுத்தல்
வேலூரில் உள்ள தலைமுறை பேரவை மற்றும் நாராயணி மருத்துவமனை ஆகியவை இணைந்து வி.ஐ.டி. துணைதலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம் பிறந்த நாள் விழாவை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் போன்று, இந்த ஆண்டும் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலசங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் வேலூர் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குனர் என்.பாலாஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்க மாவட்ட தலைவர் எம்.கணபதி, பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் சிவகாமி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் வி.ஐ.டி. துணைதலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும், இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது;
முடி திருத்தும் தொழிலை சிலர் குலத்தொழிலாக செய்கின்றனர். நம்முடைய பிறப்பு, இறப்புக்காக உழைத்துக் கொண்டிருப்பது இந்த சமுதாயம்தான்.
நான் அழுதபோது என்னுடைய தாய் சிரித்தாள். அதுதான் என்னுடைய பிறந்த நாள். என்னுடைய பிறந்த நாளை ஏழை, எளியவர்களுக்கான சிறந்த நாளாக்கத்தான் இந்த மருத்துவ முகாம்.
பிறப்பது ஒரு முறை. பணம் மட்டும் வாழ்க்கையல்ல. மனம் இருக்க வேண்டும். பசியோடு வருபவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து பாருங்கள். அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். தர்மம் தலைகாக்கும். ஆனால் தர்மம் இப்போது இல்லை. அடுத்த தலைமுறைக்கு தர்மத்தை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கும் குணத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு தேவையானதைதான் தலைமுறை பேரவை செய்கிறது.
இங்கு வந்துள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. என்னுடைய தெரிந்தவர் மிகப்பெரிய பணக்காரர். அவருடைய மகள் இந்த தொழிலை எடுத்து செய்கிறார்.கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் நுழைந்துள்ளனர். நீங்கள் உங்கள் தொழிலில் புதிய யுத்திகளை கையாள வேண்டும். காலத்திற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய உடல் நலன் முக்கியமானது. அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும். மகிழ்ச்சியாக இருங்கள். ஆரோக்கியம்தான் வாழ்க்கைக்கு முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமுறை பேரவை நிர்வாகிகள் எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன், வி.சீனிவாசன், கே.சதீஷ்குமார், கே.எஸ். சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
Comments
Post a Comment