• குடியாத்தம் மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு

 ·        குடியாத்தம் மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு - வெள்ளி விழா நினைவு தூணை நீர்வள துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வெள்ளி விழா நினைவுத்தூணை நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அணைதளத்தில் திறந்து வைத்தார்.

மோர்தானா அணை :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை 02.09.2000-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்-ல் திறந்து வைக்கப்பட்டது.

கவுண்டன்ய மகாநதி ஆந்திர மாநிலம், புங்கனூரில் உற்பத்தியாகி 25 கிலோ மீட்டர் தூரமும், தமிழகத்தில் 25 கிலோமீட்டர் தூரமும் என மொத்தம் 50 கிலோ மீட்டர் பயணித்து ஐதர்புரம் கிராமத்தின் அருகே பாலாற்றில் கலக்கின்றது. மோர்தானா அணையானது 475 மீட்டர் நீளத்திலும்,  11.50 மீட்டர் உயரத்தில் 261.360 மில்லியன் கன அடி கொள்ளளவில் நீரை தேக்கி இதன் மூலம் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மோர்தானா அணையிலிருந்து 4.50 கிலோ மீட்டர் தொலைவில் ஜிட்டப்பள்ளி கிராமத்தில் எடுப்பணை அமைக்கப்பட்டு இந்த எடுப்பணையிலிருந்து 4.20 கிலோ மீட்டர் நீளம் பொதுக்கால்வாயும், ஜங்காலப்ள்ளி கிராமத்தின் அருகே வலதுபுற பிரதான கால்வாயாகவும் மற்றும் இடதுபுற பிரதான கால்வாயாகவும் பிரிகின்றது. பொது கால்வாய் குடியாத்தம் வட்டத்தில் 4.20 கிலோ மீட்டர் பயணித்து 5 கிராமங்களில் உள்ள 110.58 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நேரடி பாசனத்திற்கு பயன்படுகிறது. வலதுபுற பிரதான கால்வாய் குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு வட்டத்தில் 43.50 கிலோ மீட்டர் பயணித்து 12 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி 25 கிராமங்களில் உள்ள 3937.63 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயன்படுகிறது.

இடதுபுற பிரதான கால்வாய் குடியாத்தம் மற்றும் கீ.வ குப்பம் வட்டத்தில் 32.25 கிலோ மீட்டர் பயணித்து 7 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி 19 கிராமங்களில் உள்ள 4227.02 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயன்படுகிறது. மோர்தானா அணை அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 முறை தனது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மோர்தானா அணை நடப்பாண்டில் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு 19 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

மோர்தானா அணை என்னுடைய வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு அணை. மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது இந்த அணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த காலத்தில் போதிய நிதி இல்லாத காரணங்களால் அப்பொழுது கட்டப்படவில்லை. இந்த அணைக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் தே.கா. துரைசாமி, கோதண்டராமன் மற்றும் சுந்தரம்

பின்னர் நான் கலைஞர் காலத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பகுதி ஒரு வறட்சியான பகுதி. இந்த அணை கட்டப்பட்டதன் மூலம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட 15 ஏரிகள் இந்த அணையின் உபரி நீரின் மூலம் நீர் பாசன வசதி பெறுகிறது. மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் கால்வாய்களில் ஒரு சில இடங்களில் கால்வாயை உடைத்து அவர்களாகவே அவர்கள் ஊருக்கு தண்ணீரை திருப்பி கொள்கின்றனர். அது தவறான நடவடிக்கை. ஒரு அணை கட்டப்படும் பொழுதே அதன் உபரி நீர் எந்தெந்த ஏரிகளுக்கு செல்ல வேண்டும் என்ற வரைபடம் உள்ளது. அப்படி ஏதாவது ஊருக்கு தண்ணீர் தேவைப்பட்டால் நிர்வாகத்திடம் சொல்லுங்கள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உடனடியாக இந்த மோர்தானா அணை உள்ள பகுதியை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டினை தயாரித்து வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர்-டம் கலந்து பேசி விரைவில் இந்த இடத்தில் சுற்றுலா தளம் அமைப்பதற்கான நிதி பெறப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.

இந்த அணை கட்டப்பட்டதன் காரணமாக குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நீர் ஆதாரம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் உள்ளது. இது மட்டுமல்ல  குடியாத்தம் நகரில் கவுண்டன்ய ஆறு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும்சுற்றி நடைப்பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில்தான் சுமார் 90 அணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டது. இப்பொழுது கூட அணை கட்ட வேண்டிய இடங்களில் எல்லாம் கட்டப்பட்டு விட்டது. நம் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் மேலரசம்பட்டு அணை மட்டுமே கட்ட வேண்டிய நிலையில் உள்ளது. அதுவும் விரைவில் கட்டப்படும். இந்த அணை கட்டுவதற்குகூட நான் அமைச்சராக இருந்த பொழுது நிதி எல்லாம் ஒதுக்கப்பட்டது. ஒரு சில தனியார் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக அந்த பணிகள் தடைபட்டன. இப்போது அந்த தடைகள் எல்லாம் அகற்றப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர்-ல் விரைவில் அந்த அணை கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. மேலும் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள பத்திரப்பள்ளி பகுதியிலும் ஒரு அணை கட்டுவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த்,  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன், நீர்வள துறை தலைமைப் பொறியாளர் பொதுப்பணித் திலகம், ஒன்றிய குழுத் தலைவர்கள் சத்யானந்தம், ரவிச்சந்திரன்,  வேல்முருகன், சித்ரா ஜனார்த்தனன், கண்காணிப்புப் பொறியாளர் பவழக்கண்ணன், செயற்பொறியாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி