• குடியாத்தம் விளையாட்டு அரங்கம் ஆய்வு.
· குடியாத்தம் நகரில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் பள்ளிகொண்டாவில் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி மதிப்பில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையில் 44 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ரூபாய் 132 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைத்திட தெரிவிக்கப்பட்டது.
அதன்படி குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் குடியாத்தம் நகரில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி கூடத்துடன்கூடிய நிர்வாக அலுவலகம், எட்டு தளங்களைக் கொண்ட 400 மீட்டர் ஓட்டப்பந்தய பாதை, பார்வையாளர்கள் அரங்கம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கோகோ, நீளம் தாண்டுதல், கபடி, செவ்வக வடிவ கிரிக்கெட் தளம், நுழைவு வாயில் வளைவு, சுற்றுச்சுவர், குடிநீர் சுத்திகரிப்பு மையம், மழைநீர் வடிகால்வாய், உயர் மின்கோபுர விளக்குகள், சூரிய ஒளி விளக்குகள், தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வசதிகளுடன் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் அடிப்படையில் மைதான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். மேலும் நிர்வாக அலுவலகம், பார்வையாளர் அரங்கம் ஆகியவற்றின் அளவீடு, கட்டுமான விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார்.
மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகில் ரூ.3.45 கோடி மதிப்பில் 1865 ச.மீ. பரப்பளவில் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா கட்டப்பட்டு வருகிறது- இந்த வாழ்வாதார பூங்காவில் சமையலறையுடன் கூடிய உணவகம், கலைக்கூடம், விற்பனை மையம், நிர்வாக அலுவலகம், கழிவறை வசதி, சுவர்களில் விளிம்பு வேலைப்பாடு, கான்கீரிட் சாலை, பேவர் பிளாக் நடைபாதை, தரைமட்ட நீர்தேக்க தொட்டி, பாதுகாப்பு சுவர், மழைநீர் வடிகால் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவுற்று மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தனார்.
வெற்றி பள்ளிகள்
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெற்றி பள்ளிகள் திட்டத்தின்கீழ் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நீட் மற்றும் ஜேஇஇ போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பினை குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலை பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சார்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் டார்வின்குமார், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ஹேமலதா, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், குடியாத்தம் வட்டாட்சியர் பழனி, அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment