• பெருமுகை கலைஞர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு.

·        பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வேலூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களின் தங்கும் நலம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் 2.15 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 250 படுக்கை வசதியுடன்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என 15.06.2023 அன்று  அறிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் 2 பகுதிகளாக 68400 சதுர அடி  தரைதளம் மற்றும் 3 தளங்களில் 119 அறைகளுடன் 250 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதி ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இக்கட்டிடத்தில் 2 படுக்கைகள் கொண்ட 48 அறைகள், 2 தனித்தனி படுக்கைகள் கொண்ட 51 சிறப்பு பகிர்வு அறை, முக்கிய பிரமுகர்களுக்கான 8 தொகுப்பு அறை, குடும்பத்துடன் தங்குவதற்கான 8 சிறப்பு அறைகள், பல நபர்கள் 4 பெரிய அறைகள் என 119 அறைகள் கட்டப்பட்டு வருகிறது.  இந்த அனைத்து அறைகளிலும் படுக்கை வசதி,  கழிவறை வசதியுடன்கூடிய குளியலறை, அலமாரி வசதி, தொலைக்காட்சி வசதி, இணையதொடர்பு வசதி, மேசை மற்றும் நாற்காலி வசதி, 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுற்றுபுற சாலை வசதிகள், கழிவுநீர் மற்றும் மழைநீர் சுத்திகரிப்பான் அமைப்பு, சமையற்கூடம், சலவையகம், பொது கழிவறைகள், ஓட்டுனர்கள் கழிவறை, உயர் மின் அழுத்த அறை, மின் தூக்கி  போன்ற சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது.

வேலூர் என்பது ஒரு புகழ்பெற்ற நகரம். இந்த வேலூருக்குப் பெருமை சேர்ப்பது சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும். நம்முடைய வேலூருக்கு இது மிகப்பெரிய பெருமை.

          ருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக இருந்த பொழுது, இந்த மாவட்டத்தின் ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நான் பணியாற்றி வந்தேன். அப்போது 23 தொகுதிகளைக் கொண்ட ஒரு மாவட்டமாக நம்முடைய வட ஆற்காடு மாவட்டம் இருந்தது. அதன் தலைநகரம் வேலூர்.

          "ஏழைகள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்று சொன்னால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போக வேண்டும்" என்று சொன்ன காலம் ஒரு காலம். அப்படிப்பட்ட இந்த சி.எம்.சி மருத்துவமனை இன்றைக்கும் அதன் புகழ் நிலைத்திருக்கிற அளவுக்கு ஒரு சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகின்றது.

          அந்த வகையில்தான் தமிழ்நாடு  முதலமைச்சர் ஒரு ஆண்டு காலத்திற்கு முன்னால் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற பொழுது, பல்வேறு தரப்பில் இருப்பவர்கள் ஒரு மனுவைக் கொடுத்தார்கள். பொதுவாக வேலூரைச் சுற்றியிருக்கிற மருத்துவப் பயனாளிகள் மட்டுமல்லாமல், பல மாநிலங்களிலிருந்து சி.எம்.சி மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் வேலூரில் தங்குவதற்குப் போதுமான விடுதி வசதிகள் கிடைப்பதில்லை.

மேலும் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் இதர மருத்துவமனைகளில் சிகிக்சை மேற்கொள்ள வருபவர்கள் தங்குவதற்கு ஏதுவாக இந்த தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.  இந்த தங்கும் விடுதியானது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரைவில் அர்ப்பணிக்கப்படவுள்ளது என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு , தெரிவித்தார்.

          இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிகண்டன், கண்காணிப்பு பொறியாளர் எ.அருள், செயற்பொறியாளர்கள் சுடலைமுத்து, உமா, உதவி செயற்பொறியாளர்கள் .நாகராஜ், லோகேஷ், உதவி பொறியாளர் விஜய், வேலூர் வட்டாட்சியர் வடிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி