• வேலூர் விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் பேச்சு.
· கிராமங்கள் வளர்ந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - வேலூர் விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் பேச்சு.
வேலூர்: கிராமங்கள் வளர்ந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
விஐடி பல்கலைகழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கணியம்பாடி ஒன்றியம் சலமநத்தம் ஊராட்சியில் தொடக்க விழா நடைபெற்றது. முகாம் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 14 மாநிலங்களை சேர்ந்த 418 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
13 கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் மருத்துவ முகாம், பள்ளி, ஏரி ஆகிய பொது இடங்களை சுத்தம் செய்தல், வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி, கால்நடை மருத்துவ முகாம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ மற்றும் காளான் வளர்ப்பு, துரித உணவு பயிற்சி, விவசாயிகளுக்கு சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவில் 6.50 லட்சம் கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் 12,600 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகள் வளர்ந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இந்தியாவில் உள்ள கிராமங்கள் வாழ்ந்தால்தான் பொருளாதார பலம் மிக்க நாடாக நாம் மாற முடியும்.
விவசாய நாடான இந்தியாவில் விவசாயப் பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைக்க வேண்டும்.
நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் பங்கேற்க வந்துள்ள மாணவர்கள் கிராமங்களில் உள்ள கல்வி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வுகளை காண உதவ வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் உணவு தானியங்கள் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரு ஏக்கரில் விளையும் கோதுமையை விட பாதி அளவுதான் இந்தியாவில் விளைகிறது. அதேபோல சீனாவில் ஒரு ஏக்கரில் விளையும் நெல்லை விட பாதி அளவுதான் இந்தியாவில் விளைகிறது. இதை நாம் மாற்ற வேண்டும்.
இந்தியாவில் விவசாயிகளுக்கு விளையும் உணவுப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைப்பதில்லை. இந்தியாவில் சுமார் 25 சதவீத தொகைதான் கிடைக்கிறது. ஆனால் வளர்ந்த நாடுகளில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 75 சதவீத தொகை கிடைக்கிறது.
கல்லூரி படிக்கும் மாணவர்கள் விவசாயத் தொழிலுக்கு வருவதில்லை. மாறாக உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அனைவரும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்.
கிராமத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து தங்களுக்கு தேவையானவைகளை அரசிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை ஊராட்சி தலைவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி பெற உதவிட வேண்டும்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் இந்தியாவில் 28 சதவீதமாக உள்ளது. தமிழகம் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விதத்தில் 50 சதவீதத்துடன் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் போட்டி போடும் வகையில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50-லிருந்து 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகமும் வளர்ந்த மாநிலமாக மாறும். இந்தியாவும் வளர்ச்சி பெறும். அழியாத செல்வமான கல்வியை ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினரான ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் பேசும்போது, "மாணவர்கள் தங்களுடைய உத்வேகத்தை நல்லவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும. அன்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் தங்களின் வாழ்க்கையில் வெற்றியை பெற முடியும்" என்றார்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணைதலைவர் கஜேந்திரன் மற்றும் விஐடி பல்கலைகழக பதிவாளர் ஜெயபாரதி, மாணவர் நல இயக்குநர் நைஜு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபாலன், கலைசந்தர், சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment