• வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை.
வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தொடர்பாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுப் பறவைகள் அல்லது கோழிகளில் ஏதேனும் இறப்புகள் ஏற்பட்டால் பொது மக்கள் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது 0416-2214918 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் எனும் AH5N1 இன்ஃபுளுயன்சாஎன்பது பறவைகளுக்கு வரும் நோய் ஆகும். பறவை காய்ச்சல் நோய் என்பது காட்டில் வசிக்கும் பறவைகளிடியே பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இந்நோய் வளர்ப்பு கோழிகள் மற்றும் பிற பறவை மற்றும் விலங்கு இனங்களை பாதிக்கக்கூடும். இந்த பறவை காய்ச்சல் வைரஸ்களால் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் நோய் தொடர்பாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு வட்டாரத்திற்கு மூன்று குழுக்கள் விதம் ஏழு வட்டாரங்களுக்கு 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் (Rapid Response Team) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
· காகம், கோழி அல்லது பறவை இனங்கள் இறந்து கிடந்தால் அவற்றை வெறும் கைகளால் தொடக்கூடாது, கையுறைகளை அணிந்து அவற்றை கையாள வேண்டும். அவ்வாறு இறந்த பறவைகள் எரிக்கப்பட வேண்டும் அல்லது 8 அடி ஆழ குழியில் சுண்ணாம்பு தூவி புதைக்கப்பட வேண்டும்.
· பொதுமக்கள் பறவை இறைச்சிகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது.
· கோழிகள் வளர்க்கப்படும் வீடுகள் அல்லது கோழி பண்ணைகளுக்கு காட்டுப் பறவைகள் விலங்குகள் நுழைவதை தடுக்க வேண்டும்.
· கோழிப்பண்ணை கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
· கோழிப்பண்ணை தொழிலாளர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதால் பண்ணைகளின் நுழைவு வாயிலில் கை, கால்களை சுத்தமாக தூய்மைப்படுத்திக் கொண்டு செல்லும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
· தும்மும்போதும், இருமும்போதும் பிறமீது சுவாசத் துளி படாத வண்ணம் மூக்கு மற்றும் வாயை மூடிகொள்ள வேண்டும்.
· சோப்பு மற்றும் தண்ணீரால் பொதுமக்கள் கைகளைத் தவறாமல் கழுவ வேண்டும்.
· கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
· பறவை காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல். தசை வலி, இருமல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.
· காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும்.
· அதிகமாகத் தண்ணீர் ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ள அரசு தெரிவித்துள்ள மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் காட்டுப் பறவைகள் அல்லது கோழிகளில் ஏதேனும் இறப்புகள் ஏற்பட்டால் அது குறித்த தகவலை உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது 0416-2214918 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment