• வேலூர் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி.

 ·        வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர்,
 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, டி.கே.எம் மகளிர் கலை கல்லூரியில் தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும்  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,  மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி இன்று அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறிய தீப்பொறிதான் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கும். அதுபோன்று மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் ஒரு சிறிய உந்துதலை விதைத்து அதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 12-ஆம் வகுப்பு தேர்வு அவர்களுடைய எதிர்கால உயர்கல்வி வாழ்க்கைக்கு அடித்தளமான தேர்வு.  அடுத்த 40 நாட்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அரசின் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் உயர்கல்வியில் இணைந்து கல்வியை தொடர்கிறார்களா என்பதை இந்த அரசு உறுதி செய்கிறது. கடந்த ஆண்டு நம்முடைய மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பயின்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் என்ன உயர்கல்வி பயில வேண்டும் என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ,  மாணவிகளுக்கு மாலை நேரங்களில் அரசு ஆசிரியர்களின் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு குறிப்பாக தொகுதி 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோன்று மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு என தனி பிரிவு அமைக்கப்பட்டு அங்கு அனைத்து விதமான புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். அரசு சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி எவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை பெற்று பயனடையலாம். இதேபோன்று குடியாத்தத்தில் ஒரு அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திலும் 40 முதல் 50 மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளுக்காக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். தற்போது ரயில்வேயில் 22000 பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டி தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மாணவ மாணவிகள் படிக்கும் காலங்களில் சிறிய சந்தோஷங்களை வழங்கும் விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உடல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்றவாறு நல்ல முறையில் படித்து குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரசு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களில் மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் உயர்கல்வியின் அவசியத்தை உணர்ந்து தேர்வுகளை நன்றாக எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே. இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயசித்ரா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உதவி இயக்குநர் .காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி