• போதை பொருட்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு.
· வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு - மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி வைத்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அனைவரும் எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவது நமது கடமை. தமிழ்நாடு அரசு "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" (Drug-Free Tamil Nadu) என்ற இலக்கை உருவாக்குவதை ஒரு முக்கிய முன்னுரிமையாக எடுத்துச் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருட்களுக்கு எதிரான இந்த முயற்சியை ஒரு போர் என்றே கூறலாம்.
இந்த போரில் அரசாங்கம் மட்டும் தனியாக நின்று வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்காகத்தான் உங்களைப் போன்ற மாணவர்களையும், இளைஞர்களையும் போராளிகளாக உருவாக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
ஒரு போரில் ஈடுபடுவதற்கு முன்பு, நம்முடைய எதிரி யார் என்பதை நாம் துல்லியமாக அறிய வேண்டும். நம்முடைய எதிரி போதைப்பொருள்.
தனிமனிதனாக நமக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள், நம் குடும்பத்திற்கு அது கொண்டுவரும் பேரழிவுகள் மற்றும் மன உளைச்சல்கள், ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அது ஏற்படுத்தும் சீரழிவுகள் ஆகியவை போதை பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகளாகும்.
இந்த எதிரியை நாம் எவ்வாறு எதிர்கொண்டு தாக்க வேண்டும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான், மற்றவர்களும் இதில் சிக்காமல் தடுத்து, ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நம்மால் உருவாக்க முடியும்.
சுய கட்டுப்பாடு என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் மிக அவசியமானது. நமது எதிர்காலம், நமது மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என அனைத்துமே உங்களைப் போன்ற இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது.
இந்த எதிர்காலம் சிறப்பானதாக அமைய வேண்டுமெனில், நமக்குள்ளே சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். வல்லுநர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று, சுய கட்டுப்பாட்டுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். படிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்வில் நம்முடைய இலட்சியத்தை அடைய முடியும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, உதவி ஆணையர் (கலால்) இரா.குணசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய்சந்திரன், மாவட்ட மனநல மருத்துவர் மரு.சிவாஜி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.பிரபாகரன் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment