• வேலூர் கம்பன் கழகம் - கண்ணதாசன் நூற்றாண்டு விழா.
· வேலூர் கம்பன் கழகம் சார்பில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா.
· வி.ஐ.டி துணைதலைவர் ஜி.விசெல்வம் கலந்து கொண்டு கண்ணதாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகழாஞ்சலி.
வேலூர் கம்பன் கழகம், வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ் துறை சார்பில் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா ஊரீசு கல்லூரி காப் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவரும், வி.ஐ.டி. துணைதலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி, கம்பன், கண்ணதாசன் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசியதாவது,
வேலூர் கம்பன் கழகம், கம்பன் விழாவை மட்டும் கொண்டாடாமல் கண்ணதாசனையும் கொண்டாடும். உலக தாய்மொழி தினத்தையும் கொண்டாடும்.
கண்ணதாசன் ஒரு நாத்திகவாதியாக இருந்து ஆத்திகவாதியாக மாறியவர். அவர் நாத்திகவாதியாக இருந்த காலகட்டத்தில் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றபோது, அவரிடமும் கம்பராமாயண புத்தகம் ஒன்று தரப்பட்டது. அதை எரிப்பதற்கு முன்பு "ஒருமுறை படித்துவிட்டு எரிக்கலாமே" என்று நினைத்து அதைப் படித்த கண்ணதாசன், அன்று முதல் கம்பனை நேசிக்க தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா பேசும்போது, கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் கம்பன் வாழ்ந்திருந்தால், கம்பன் தன் வாரிசு கண்ணதாசன் என சொல்லியிருப்பார் என்றார். அந்த அளவுக்கு திறமை படைத்தவர் கண்ணதாசன்.
திரை துறையில் மறக்க முடியாது இரண்டு வசனங்களில் ஒன்று, 'நாடோடி மன்னன்' படத்தில் எம்.ஜி.ஆர் பேசிய வசனம். "என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை. நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு என்றார். இது கண்ணதாசன் எழுதிய வசனம்.
அதேபோல, 1957-ம் ஆண்டு வெளியான 'மகாதேவி' படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசும், “மணந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி”. இந்த 2 வசனங்களும் தமிழ் வாழ்க்கையில் மறக்க முடியாத வசனம்.
"மயக்கமா கலக்கமா" என்ற பாடல்தான் கவிஞர் வாலியை உருவாக்கியது.
யாருக்கும் ஒரு மகிழ்ச்சியோ, துக்கமோ என்றால் அதற்கு கண்ணதாசன் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அவர் எழுதிய பாடல் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை" என்ற பாடல். இது போல பல வாழ்க்கை தத்துவங்களை சொன்னவர் கண்ணதாசன்.
மற்ற கவிஞர்கள் எல்லாம் வழக்கறிஞர் போல, கண்ணதாசன் நீதிபதியை போன்றவர். தீர்க்கமாகப் பேசக்கூடியவர். இன்றைய கவிஞர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
கண்ணதாசன் எழுதிய பாடல் இன்றும் நிலைத்து கொண்டிருக்கிறது. அவருடைய பாடல்கள் அர்த்தமுள்ளவை. இன்றைய பாடலில் அர்த்தமில்லை, இசை இருக்கிறது, அர்த்தமில்லை. ஆனால், அன்றைய பாடலில் அர்த்தம் இருந்தது, இசை குறைவாக இருந்தது, வார்த்தைகள் அதிகமாக இருந்தது. அதற்காகத்தான் இன்றும் நாம் 100 ஆண்டு காலம் கண்ணதாசனை போற்றி கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சங்க செயலாளர் சோலைநாதன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைதலைவர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சங்க செயலாளர் வெ.சோலைநாதன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைதலைவர் மா.சோதி, இணைசெயலாளர் ராஜேந்திரன், டாக்டர் இனியன் சமரசம், ஆட்சிகுழு உறுப்பினர்கள் இரா.ப.ஞானவேலு, வி.என்.டி. சுரேஷ், கவிஞர் ச.லக்குமிபதி ஆகியோர் பேசினர்.
விழாவில் ஊரிசு கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் ஸ்டான்லி ஜோன்ஸ். காட்டுப்புத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஸ்வநாதன், ஆடிட்டர் பாண்டியன், பேராசிரியர் பொன்.செல்வகுமார், கவிஞர்கள் சு.சுப்பிரமணி, குமரன் சீனிவாசன், சமூக ஆர்வலர்கள் வேலூர் சரவணகுமார், காட்பாடி கே.எஸ்.ரவி, பிரம்மபுரம் சதீஷ்குமார், திருவலம் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழியக்கத்தின் பொதுசெயலாளர் பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில் "திரை இசைப்பாடல்களுக்குத் தீந்தமிழ் இலக்கியத் தகுதி பெற்றுத் தந்தவை காதல் பாடல்களே! தத்துவப் பாடல்களே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசை கச்சேரி நடைபெற்றது.

Comments
Post a Comment