• வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
· வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆய்வு கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரூ.1,30,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.9,25,000/- மதிப்பில் கடனுதவியும், பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில் முனைவோர் அதிகாரமளிப்பு திட்டத்தின்கீழ் (TWEES) 1 பயனாளிக்கு ரூ.10,00,000/- மதிப்பில் கடனுதவியும், கூட்டுறவு துறையின் சார்பில் அமுத சுரபி மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.15,00,000/- மதிப்பில் கடனுதவியும், ஆசிர்வாதம் மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.4,68,000/-மதிப்பில் கடனுதவியும், ஆறுபடை மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.9,00,000/-மதிப்பில் கடனுதவியும், கணபதி மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.14,00,000/- மதிப்பில் கடனுதவியும், நவசக்தி மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.11,00,000/- மதிப்பில் கடனுதவியும், ராஜராஜேஸ்வரி மகளிர் சுய உதவி குழுக்கு ரூ.15,00,000/- மதிப்பில் கடனுதவியும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.17,50,000/- மதிப்பில் நலத்திட்ட உதவியும், சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.2,53,000/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், தாட்கோ-தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.5,42,255/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி திட்டத்தின்கீழ் 39 பயனாளிகளுக்கு ரூ.29,00,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.18,22,700/- மதிப்பில் உபகரணங்களும், 13 நபர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளும், வேளாண்மை துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.2,18,700/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.20,300/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1,64,29,955/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி வழங்கினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாவட்ட ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊடக துறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதை வெளிப்படை தன்மையோடும் உறுதி செய்ய பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த வேலூர் மாவட்டத்திற்கு என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேலூர் மண் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற இடம். மேலும் வேலூர் கோட்டை இந்திய நாட்டின் பன்முகத்தையும், ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் வகையில் திருக்கோயில், மசூதி மற்றும் தேவாலயம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இடம் என்பது மற்றொரு சிறப்பு.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது குறிப்பாக விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் கீ.வ.குப்பம் பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் மா போன்ற விளைபொருட்களை ஆந்திர தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைய வேண்டியது நம்முடைய முக்கிய பணியாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் இலவம்பாடி கத்திரிக்காய் மற்றும் ஒடுகத்தூர் கொய்யா ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கு தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவற்றில் முழு கவனம் செலுத்தும்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலை வசதிகள் மற்றும் தங்கு தடையற்ற குடிநீர் விநியோகம் போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்பணிகளையும் நாம் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, பன்னோக்கு மருத்துவமனை, 5 பொது மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் இதர தேவைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர்-ன் அனைத்து திட்டங்களையும், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தையும் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.ம.சுதாகர் (காட்பாடி), மு.ம.வினோத்கண்ணன் (வேலூர்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment