• வேலூர் மாவட்ட குழந்தைகள் இல்ல மாணவிகள் நினைவு பரிசுகள்.
· வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள 14 குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவ, மாணவிகளின் 15 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி பயில உள்ளனர். இம்மாணவ, மாணவிகளுக்கு உயர்க்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று 15 மாணவ, மாணவிகளையும் நேரில் அழைத்து அவர்களுக்கு தேநீர் மற்றும் இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்.
மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயின்று தற்பொழுது உயர்க்கல்வி பயில செல்ல உள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் எங்களுடைய, அதாவது இந்த அரசினுடைய குழந்தைகள் நீங்கள் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு உங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்கு செல்ல உள்ளீர்கள். இதுநாள் வரை நீங்கள் அனைவரும் எங்களுடைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் இருந்தீர்கள். தற்பொழுது புதுமையான ஒரு இடத்திற்கு அதாவது கல்லூரிக்கு செல்ல உள்ளீர்கள். புதிய இடத்தில் உங்களை நிலைநிறுத்தி கொள்ள ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எந்தவொரு உதவி தேவை என்றாலும் என்னையோ அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரையோ அணுகலாம். உங்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கல்லூரி பயிலும்பொழுது நீங்கள் உங்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும். நம்முடைய அரசு நூலங்களில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு சென்று போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை படிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நல்ல முறையில் உயர்க்கல்வியை முடித்து சிறப்பான நிலையை அடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ், தெரிவித்தார்.
முன்னதாக மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் போட்டி தேர்வுகளில் குறிப்பாக குடிமைப் பணி மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1 போன்ற தேர்வுகளில் அவருடைய அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்ஜித் உடனிருந்தார்.

Comments
Post a Comment