• வேலூர் அரசு மருத்துவமனை, ஆவின் ஆட்சியர் ஆய்வு.
· வேலூர் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதார நிலையத்தில் வருகை பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அணைக்கட்டு அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பிரிவு, மகப்பேறு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஊணை வாணியம்பாடி அரசு துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அணைக்கட்டு வட்டம், கன்னிகாபுரம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளிடம் உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்றும், மாதந்தோறும் மருத்துவ துறையினர் தங்களுக்கு தேவையான மருந்துகள் முறையாக வழங்கின்றனரா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, கொணவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எடை, உயரம் வயதிற்கேற்றாற்போல் உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குழந்தைகளின் கல்வி தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் ஆவினை பார்வையிட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு பால் உற்பத்தி பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பால் உற்பத்தி பொருட்களின் தரம் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பென்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்கி, சிகிச்சைகளை வழங்க வேண்டுமெனவும், போதுமான அளவில் மருந்துகளை இருப்பில் வைத்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
முன்னதாக ஊசூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படாதவண்ணம் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், குடிநீர் தொட்டிகளில் முறையாக குளோரினேசன் செய்து வழங்க வேண்டுமெனவும் சம்மந்தப்பட் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சிவக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மருத்துவர்கள் மரு.ரதி திலகம், மரு.ரவிசந்திரன், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன், வேலூர் வட்டாட்சியர் பழனி, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை, சதீஷ்குமார், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment