• வேலூர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆட்சியர் ஆய்வு.

·        வேலூர் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் மற்றும் சாலை பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாபுரம், பெருமுகை, செம்பேடு ஆகிய ஊராட்சிகளிலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், அகரம் மற்றும் இறைவன்காடு ஆகிய ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலை மற்றும் குடிநீர் பணிகள் குறித்து  மாவட்ட  ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.  

வெங்கடாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ரூ.10 மதிப்பில் விற்கப்படும் இயற்கை உரங்களை பார்வையிட்டார். மேலும் இந்த ஊராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் முறைகள் விரிவாக கேட்டறிந்தார். பிளாஸ்டிக் பொருட்களை சிறு துகள்களாக நறுக்கி, மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்த ஊராட்சியானது வேலூர் மாநகராட்சியை ஒட்டியுள்ளதால் வேலூர் மாநகராட்சியில்  சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒரு பகுதியை இம்மையத்தில் சிறுதுகள்களாக்கி மறுசுழற்சி செய்வதற்கான சாத்திய கூறுகளை ஆராயும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வெங்கடாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூபாய் 2.16 இலட்சம் மதிப்பில் நடவு செய்யப்பட்ட 500 மரச்செடிகளையும், வட்டார நாற்றங்கால் பண்ணையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பண்ணையில் நாற்றாங்கால் படுக்கை அமைக்கும் முறைகள், விதை விதைத்தல், பாலித்தீன் பைகளில் விதைகள் விதைத்தல், வளர்ந்த செடிகளை பாலித்தீன் பைகளில் மாற்றி அமைத்தல் போன்ற செயல்முறைகளை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, வகுப்பறையிலிருந்த மாணவ, மாணவிகளிடம் காலை உணவு திட்டம் குறித்து  கேட்டறிந்தார். பின்னர் பெருமுகை ஊராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நூண் உரம் தயாரிக்கும் மையத்தையும், தூய்மை பாரத திட்டம்-IIன்கீழ் ரூபாய் 7.85 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தையும்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பெருமுகை ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை மற்றும் கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கழிவறைக்கு தேவையான  தண்ணீர் இணைப்பினை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் வேலூர் ஊராட்சி ஒன்றியம், செம்பேடு ஊராட்சியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின்கீழ் ரூபாய் 19.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மோட்டார் பம்பு இயக்கும் பணியாளரை அழைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முறையாக குளேரினேசன் செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் இந்நீர்த்தேக்க தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரத்தை கொண்டு நீரேற்றப்படுவதற்கு செய்யப்பட்டுள்ள பணிகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூபாய் 2.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஊராட்சியில்  மொத்தம் 4 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். பயனாளிகள் தங்களுடைய வீடுகளை விரைந்து கட்டுவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென  அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்விடத்தில் விரைவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை மையத்தை தொடங்கவும், உணவு விடுதி அமைக்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், அகரம் ஊராட்சியில்  கடந்த மழையின்போது உத்திர காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த 153 மீட்டர் நீளத்திற்கான குடிநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே குடிநீர் குழாய் பதிப்பதை தவிர்த்து எதிர்வரும் காலத்தில் பாலத்தின்வழியாக எஃகு குழாய்களாக அமைத்து நிரந்தர தீர்வு காணும்படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து இறைவன்காடு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.45.65 இலட்சம் மதிப்பில் சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை  முதல்  இந்திரா நகர் வரை 970 மீ நீளத்திற்கு  அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தார்சாலையானது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி தார் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், சாலையானது 3 மீட்டர் அகலத்திற்கு போடப்பட்டுள்ளதா என்பதையும் அளவீடுகளின் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலைக்கு பயன்படுத்தப்பட்ட தார், ஜல்லி மற்றும் இதர கலவைகளின் தர சான்றிதழ்களையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அருண், வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு,  பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜ், செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பால்வேனி இளங்கோ, இறைவன்காடு ஊராட்சி மன்ற தலைவர் கு.கலைச்செல்வி, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை, சதீஷ்குமார், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், வினோத்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.