• வேலூர் CMC மருத்துவ கல்லூரி சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு "சிறப்பு மையம்"
· வேலூர் CMC மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (International Diabetes Federation - IDF) "சிறப்பு மையம்" அந்தஸ்து.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவுத்துறை வளர்சிதைவு மாற்று துறையின் சார்பில் டாக்டர் நிகில் தாமஸ், டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத் துறை (Department of Endocrinology, Diabetes and Metabolism), கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் (Christian Medical College - CMC) வேலூர், கல்வி, பயிற்சி, நோயாளர் பராமரிப்பு, வெளிச்சேவை (Outreach) மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் அதன் திறனை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், மே மாதம் 2026-ல் முதல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் (International Diabetes Federation - IDF) "சிறப்பு மையம்" (Centre of Excellence) என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இந்த பெருமைக்குரிய அறிவிப்பு ஒரு விருது அல்ல. மாறாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக துறையில் பணியாற்றிய பலரின்கடின உழைப்பு, வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.
2001-ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு கல்வி (Diabetes Education) என்ற கருத்து ஆரம்ப நிலையில் இருந்தபோது, நீரிழிவு நோயாளிகளை முழுமையான முறையில் பராமரிக்க பயிற்சி பெற்ற நீரிழிவு செவிலியர் கல்வியாளர்களை (Diabetes Nurse Educators) அமர்த்தியது. இது அப்போது ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான முயற்சியாக இருந்தது.
காலப்போக்கில், இந்த முயற்சி பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு விரிவான திட்டமாக வளர்ந்தது. இது நீரிழிவு நோயாளிகளின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கான நீரிழிவு ஆலோசகர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது.
நீரிழிவு கல்வி மற்றும் பயிற்சிக்கான இந்த மாதிரி, ஒரு முன்னோடி மாதிரியாக இருந்து, இந்தியாவின் பிற பகுதிகளிலும் அண்டை நாடுகளிலும் இதேபோன்ற நீரிழிவு பராமரிப்பு திட்டங்கள் உருவாக ஊக்கமளித்துள்ளது.
உலக நீரிழிவு அறக்கட்டளை (World Diabetes Foundation), ப்ராஜெக்ட் ஹோப் (Project Hope), நோவோ நோர்டிஸ்க் அறக்கட்டளை (Novo Nordisk Foundation) போன்ற அமைப்புகளின் ஆதரவுடனும், தொலைதூர கல்வி துறையுடன் இணைந்து செயல்படும் தனது சொந்த நிலையான திட்டங்களின் மூலமும், பலமருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் தனிநபர்களாகவும் பல்துறை குழுக்களாகவும் பயிற்சி பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ள உலகளாவிய நீரிழிவு பாத பராமரிப்பு பயிற்சித் திட்டம் (Global Diabetes Foot Training Programme), அதன் தனித்துவமான நான்கு கட்டப் பயிற்சி முறையின் மூலம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.
2007 முதல் 2012 வரை, உட்சுரப்பியல் துறையின் கீழ் பல ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அவற்றில் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வரும் இளம் வயதினருக்கான நீரிழிவு கிளினிக் (Young Adult Diabetes Clinic), ஒருங்கிணைந்த நீரிழிவு பாத பராமரிப்பு கிளினிக் (Integrated Diabetes Foot Clinic) மற்றும் 2017-ல் தொடங்கப்பட்ட கர்ப்ப கால நீரிழிவு கிளினிக் (Gestational Diabetes Clinic) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பொதுவான நீரிழிவு கிளினிக்குகளுடன் சேர்ந்து, இந்த சிறப்பு கிளினிக்குகள் நீரிழிவு நோயும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் சிறப்பாக கையாளப்படுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளன. இதற்காக PMR, P&O, பிசியோதெரபி, பொது அறுவை சிகிச்சை, இரத்தநாள அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, எலும்பியல், மருத்துவ உயிர்வேதியியல் உள்ளிட்ட பல துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
துறையின் முக்கிய சாதனைகளில், 2015-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) வழங்கிய "Diabetes Team of the Year" விருதும், 2017-ஆம் ஆண்டு லண்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் வழங்கிய "Excellence in Patient Care Award" விருதும் அடங்கும்.
ஆராய்ச்சி துறையிலும் இந்த பிரிவு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளது. குறிப்பாக, உள்ளூர் மக்களிடையே நீரிழிவு நோயின் பரவல், இளைஞர்களின் ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் பள்ளிகளுடனும் உயிரியல் புள்ளியியல் துறையுடனும் (Vellore Birth Cohort) இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இளம் வயதினருக்கான நீரிழிவு, கணையம் தொடர்பான நீரிழிவு, மரபணு சார்ந்த நீரிழிவு வகைகள், லிபோடிஸ்ட்ரோபி மற்றும் பிற பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்த துறை முன்னோடியாக இருந்துள்ளது. 2011 முதல் அடுத்த தலைமுறை மரபணு ஆய்வு (Next Generation Sequencing) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பல்வேறு வகையான நீரிழிவு நோய்களை குறைந்த செலவில் கண்டறிய கூடிய மரபணு பரிசோதனை தொகுப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும், குறைந்த பிறப்பு எடை கொண்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நீரிழிவுடன் தொடர்புடைய பிற உடல் நலப்பிரச்சினைகள் கொண்டவர்களை பற்றி ஆய்வு செய்வதற்காக Hyperinsulinemic Euglycemic Clamp, Indirect Calorimetry மற்றும் NMR Spectrometry போன்ற மேம்பட்ட ஆராய்ச்சி முறைகளையும் பயன்படுத்தியுள்ளது.
குறிப்பாக, "வேலூர் அறிவிப்பு" (Vellore Declaration) மூலம் முன் வைக்கப்பட்ட Type 5 Diabetes என்ற கருத்தை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இது உலகளாவிய மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டதோடு, அடிப்படை அறிவியல் முதல் தொற்றியல் ஆய்வுகள் வரை பல்வேறு துறைகளில் சர்வதேச ஒத்துழைப்புகளுக்கும் வழிவகுத்தது.
அண்மை காலங்களில், உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து 10 நாடுகளை உள்ளடக்கிய கர்ப்ப கால நீரிழிவு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வுகளிலும், நீரிழிவு விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) தொடர்பான பணிகளிலும் இந்த துறை பங்கேற்றுள்ளது.
உலகின் பல முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இந்த துறை தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. அவற்றில் நியூயார்க்கின் Albert Einstein Medical College, Copenhagen University, Karolinska Institute, Monash University, Melbourne University, Colombo University உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையின் வளர்ச்சிக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும், இந்தியாவில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) "Centre of Excellence in Diabetes Care" அங்கீகாரத்தையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) "Collaborating Centre of Excellence" அங்கீகாரத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ள மிகச் சில நிறுவனங்களில் நாங்களும் ஒருவராக இருப்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறோம்.
இன்று நாம் அடைந்துள்ள இந்த உயரத்தை எட்டுவதற்கு பங்களித்த அனைத்து நலன் விரும்பிகள், இணைஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நீரிழிவு கல்வியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறோம்.
ஒரு சிறிய நீரிழிவு கல்வி திட்டமாக தொடங்கிய பயணம், இன்று உயர்தர நோயாளர் பராமரிப்பு, கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் ஒரு முன்னணி மையமாக வளர்ந்துள்ளது. அந்த உயர்ந்த தரத்தை நாள்தோறும் நிலை நிறுத்துவதற்காக வேலூர் சிஎம்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

Comments
Post a Comment