‘ஹார்வர்டு நாட்கள்’புத்தகம் - சிறப்பு பார்வை.

 ·         இரா. செல்வம்,ஐஏஎஸ் எழுதியஹார்வர்டு நாட்கள் புத்தகம் - காவல் துறை தலைவர் (ஓய்வு) எம்.எஸ்.முத்துசாமி, ஐபிஎஸ் - சிறப்பு பார்வை.  

 வணக்கம்.

    இரா. செல்வம்,ஐஏஎஸ் எழுதியஹார்வர்டு நாட்கள்என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழா எழும்பூர் அரசு அருங்காட்சியகம் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

       167 பக்கங்கள்கொண்ட இப்புத்தகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பதிப்பாகும். விலை 200 ரூபாய்.

          யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுள் இதுவும் ஒன்று. மிகவும் எளிமையான நடையில், ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில், ஆங்காங்கே புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்ட, மிகவும் சுவராஸ்யமான புத்தகம் இது.

     கண்ணாடி இல்லாமல் படிக்கக் கூடிய எழுத்துரு அளவு (font size), எளிமையாகப் புரியும் விதத்தில் சின்னச் சின்ன பத்திகள் (paragraphing), தேவைப்படும் இடங்களில் படங்கள் (photos), கூறியது கூறல் இல்லாமை, நேர்த்தியான அட்டை வடிவமைப்பு என இப்புத்தகத்திற்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. கற்பனை என்பதற்கு இந்தப் புத்தகத்தில் இடமே இல்லை. அனைத்தும், உள்ளது உள்ளபடியே பகிரப்பட்டுள்ளது.

சாலைகள்,

பள்ளிகள்,

நூலகங்கள்,

பொது மருத்துவம்,

நிலம் பதிவு செய்தல்,

தண்ணீர் பங்கீடு, வேளாண்மை,

விவசாயிகள் நிலை,

தொழில் நுட்பங்கள்,

நகரங்கள்,

சுற்றுலாத்தலங்கள்

போன்ற பல்வேறு தலைப்புகளில்

அமெரிக்காவும், இந்தியாவும்

ஒப்பிடப்பட்டு விளக்கப்பட்டு,

விவரிக்கப்படும் முறை, நம்மை மிகவும் சிந்திக்கத்தூண்டுகிறது.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கும்,

அமெரிக்க அரசின் திறனுக்கும்,

அதன் கலாச்சார விழுமியங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும்,

மனித குல மேம்பாடு ஒன்றே அமெரிக்காவின் நோக்கம் என்பதாலும், அமெரிக்காவில் நிர்வாகத் துல்லியம் சாத்தியப்படுகிறது என்பதை நிறைய ஆதாரங்களுடன் இப்புத்தகம் நிரூபணம் செய்கிறது.

நம்மை நாமே குறை கூறுவது நோக்கமல்ல.

 ஆனால், அறிவியல்பூர்வ சிந்தனை இன்னும் அதிகம் நமக்குத் தேவை

என்பதை உணர்த்துவதே, இப்புத்தகத்தின் ஆசிரியரின் நோக்கம்.

இந்தியர்களின் ரேசன் அட்டை போன்றது அமெரிக்கர்களின் ஓட்டுனர் உரிமம். நல்ல சாலைப் பராமரிப்பு, அமெரிக்கர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்தியாவில், அலுவலகம் செல்லும் ஒருவர், ஒரு ஆண்டுக்கு, முப்பது நாட்களை சாலைகளிலேயே கழிக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவில், அட்மிஷன் என்ற பெயரில் பள்ளிகளில் யாரும் அலைக்கழிக்கப்படுவது இல்லை. ஆனால், நம் நாட்டில், பிள்ளைகளின் அட்மிஷனுக்காக, பெற்றோர்கள் ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்கு படிப்பதைப்போல பயப்படுகிறோம்.

இந்தியக்கல்வி வெறும் வயிற்றுத் தேடலுக்கானதாக சுருங்கி விட்டதே,

என நூலாசிரியர் மனம் வெதும்புகிறார்.

அமெரிக்க நாடுகளில், சுகாதாரத்திற்காக தனி மனிதனுக்கு இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த நிலை இல்லை.

அமெரிக்காவின் சுற்றுலாத் தலங்களை ஒப்பிடும்போது, இந்திய சுற்றுலாத் தலங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால், அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பத்தில் ஒரு பங்கினரே, இந்தியாவுக்கு வருகின்றனர்.

அமெரிக்காவில், காப்பீடு இல்லாமல் நிலம் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது. தவறான பத்திரப்பதிவுக்கு அரசே இழப்பீடு வழங்கும்.

ஆனால், இந்தியாவில் நிலுவையிலுள்ள நிலம் சார்ந்த வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 324 வருடங்கள் ஆகும் என  நிதிஆயோக் கூறுகிறது,

என்பது போன்ற பல செய்திகள் அவசியம் படிக்க வேண்டியவை.

இரா.செல்வம்,ஐஏஎஸ் எழுதிய இப்புத்தகத்தை வாசிக்கும்போது, அவரது கையைப் பற்றிக் கொண்டு, அவருடனே அமெரிக்காவைச் சுற்றி வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நாடு நன்றாக இருக்க வேண்டும், இந்திய மக்கள் மாண்புடன் வாழ வேண்டும் என ஏங்கித் தவிக்கும், ஒவ்வொரு தனி மனிதனும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம் இது.

இமாசலப்பிரதேசம்-லாகுல் ஸ்பிட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய அனுபவங்களை இந்நூலாசிரியர் தனிப் புத்தகமே எழுதலாம். இப்புத்தகத்தில் உள்ள அவரது ஒவ்வொரு அனுபவங்களும் நமக்கு மயிர்கூச்செரிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்திய ஆட்சிப் பணியானது, இந்திய சேவைப் பணியாக மாற வேண்டும் என்கிற நூலாசிரியர்  இரா.செல்வம், ஐஏஎஸ்-க்கு ஒவ்வொரு வாசகனும் ராயல் சல்யூட் அடிக்க வேண்டும்.

-அன்புடன்,

எம்.எஸ்.முத்துசாமி, ஐபிஎஸ்.

காவல் துறை தலைவர்(ஓய்வு).

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.