• ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

  • ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

                வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2026-ம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக தோட்டக்கலை துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2026-27 குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அடுத்ததாக கால்நடை பராமரிப்பு துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 100% மானியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக கரவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவசாயிகளால் முன் வைக்கப்பட்டன.

தென்பாலாறு இணைப்பு திட்டம் மற்றும் பத்ரபல்லி அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், மா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 50,000 என்ற அளவில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஆடி பட்டம் துவங்க உள்ளதால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும்,  கணியம்பாடி பாலம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து கால்வாய் தூர் வாரும் பணியினை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஊசூர் பகுதியில் மின்சார தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய மின்மாற்றி அமைத்து தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

வேலூர், அலமேலுமங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு பணிகளின்போது இடிக்கப்பட்ட அலமேலுமங்காபுரம் பேருந்து நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், அலமேலுமங்காபுரம் கானாறு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டியும், மாட்டு தீவனங்களில் கலப்படம் காணப்படும் பகுதியில் உள்ள தீவனம் விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியும், கணியம்பாடி வட்டாரம் சோழவரம் மற்றும் பிற ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டி மேலும் சோழவரம் ஏரிக்கரை சீரமைக்கும் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

காட்பாடி வட்டாரம் திருமணி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டியும், சேம்பள்ளி ஊராட்சி உப்பரபள்ளி பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டி. சேம்பள்ளி ஊராட்சியில் மாற்று திறனாளிகளுக்கான நலக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், சத்துவாச்சாரி ரங்காபுரம் மலையோர கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டியும், அணைக்கட்டு, குடியாத்தம் மற்றும் காட்பாடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டி, பாலாற்றின் நீர் உப்பு நீராக மாறி வருவதை தடுக்க வேண்டி மற்றும் வேலூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் மக்களுக்கு கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவ முகாம்கள் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டியும், மேலரசம்பட்டு அணை கட்டுவதற்கு பதிலாக ஆற்றின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

 சிங்கல்பாடி பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், குடியாத்தம் பள்ளிக்குப்பம் உத்திரகாவேரி மேம்பாலம் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டியும், ராமாபுரம் சத்தியமங்கலம் ஏரி உபரி நீர் செல்லும் வழியில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றி மற்ற உபரி நீர் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டியும், கே.வி.குப்பம் பகுதியில் அதிகப்படியாக விளையும் கீரைகளை கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

அரியூர் கூட்டுறவு நூற்பாலை நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளதால் அந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டியும் விளாவடி ஏரி நீர்வரத்து கால்வாய் மற்றும் ஏரியினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டியும் தண்ணீரின் தரத்தை கண்காணிக்கும் பொருட்டு விரிஞ்சிபுரத்தில் ஒரு கண்காணிப்புமானி அமைக்க வேண்டியும், கூட்டுறவு நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மா உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் அதனை கொண்டு தயாரிக்கும் மாம்பழச்சாற்றினை சத்துணவு திட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது .

.மோர்தானா அணையிலிருந்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், அகரம்சேரி கொத்தகுப்பம் இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் மின்தட்டுப்பாட்டால் விவசாய மின்மோட்டார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கைகள்  வைக்கப்பட்டது .

இக்கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி,  கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் ஆ.பழனிசாமி,  இணைஇயக்குநர் (வேளாண்மை) ஸ்டீபன்ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி (வேளாண்மை), மின்வாரிய செயற் பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் , வேலூர்  வருவாய் கோட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், வனவியல் விரிவாக்க மையம் அலுவலர் மதன்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.