• விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

·        வேளாண்மை தனிநிதி நிலை அறிக்கை 2026-27 தொடர்பான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கான  விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முன்னிலையில்  நடைபெற்றது.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை 2026-27 தொடர்பான வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய  8  மாவட்டங்களுக்கான  விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார் முன்னிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சர்க்கரை துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வேளாண் உபகரணங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில்  வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.

மிழ்நாடு முதல்வர் தளபதி தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு, மாநிலத்தின் வேளாண் வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், வேளாண்மை தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விவசாயிகளின் கருத்துகளையும், தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

அந்த நோக்கத்தின் தொடர்ச்சியாக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னதாக, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் வேளாண்மையுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அவர்களது கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் கள அனுபவங்களை விரிவாகக் கேட்டறிந்து, அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனை செயல்படுத்தும் விதமாக, வேலூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த மூன்றாவது கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள மனித வள மேலாண்மை துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களே, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், ஆணையர், சர்க்கரைத் துறை, இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, இயக்குநர், வேளாண்மைத் துறை, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், தலைமை பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் பழந்தமிழ் வாக்கியத்திற்கு ஏற்ப, நாட்டு மக்களுக்கு உணவளித்திடும் உன்னத பணியினை தன் உயிராக எண்ணி உழைத்து வரும் நம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிடவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மண் வளப்பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, இயந்திர பயன்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் விலைப்பாதுகாப்பு, மேம்பட்ட தரத்தில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ணற்ற திட்டங்களை வகுத்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதி சேர்த்திடும் வகையில் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு அதற்கேற்ப வேளாண்மை நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமாக ஜூன் 12 அன்று திறக்கப்படும் காவிரி நீரை இந்த ஆண்டு திறக்க இயலவில்லை. இருப்பினும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 134 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்புத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியிலும், ஆட்சி பொறுப்பேற்ற 40 நாட்களில்  விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து 14 இலட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் 6000 கோடி ரூபாய் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

புதிதாக இந்த அரசு பதவியேற்ற நிலையில் 2026-27ஆம் ஆண்டிற்காக, 131 இலட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்விலக்கை அடைவதற்காக, சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் எதிர்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம். பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், சிறுதானிய இயக்கம் போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், மலர்கள் வாயிலாக விவசாயிகள் தொடர் மற்றும் உயர் வருமானம் பெற இயலும் என்பதால், அவற்றின் பரப்பு விரிவாக்கத்திற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும்.

பயிர்க்காப்பீட்டினைப் பொறுத்தவரையில், தற்போது நிலவும் எல்-நினோ நிகழ்வின் தாக்கத்தால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2026-2027 ஆண்டில் 648 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள், வங்கிகள் அல்லது பொதுசேவை மையங்கள் வாயிலாக 31.07.2026-ம் தேதிக்குள் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

குறைந்து வரும் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு வேளாண்மை தொழிலை இயந்திரமயமாக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான மற்றும் இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, சந்தை விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் அவர்கள் பாதிக்கப்படாத வகையில், குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் இதர அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு தொடர்ந்து உருவாக்கும்

விவசாயிகளின் தேவைகள். எதிர்பார்ப்புகள் மற்றும் களத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக அறிந்து, அவற்றிற்கு நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கத்தில், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு வகுத்திடும் என உறுதியளிக்கிறேன்.

இந்நிலையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை மேலும் பயனுள்ளதாக வடிவமைக்கும் நோக்கத்தில், தங்களது மதிப்புமிக்க கருத்துகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை சுருக்கமாகப் பகிர்ந்து, அதிகமான விவசாயிகள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், தெரிவித்தார்.

மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  தெரிவித்ததாவது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது நமது விவசாயம் தான். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அதனை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கும் இந்த அரசின் முயற்சி பாராட்டத்தக்கது.  இத்தகைய கருத்து கேட்பு கூட்டம் நல்லாட்சியின் அடையாளமாகும்.

மனிதவள மேம்பாட்டு துறையை பொருத்தவரை விவசாயம் என்பது உணவு உற்பத்தி மட்டுமல்ல. அது மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாகும். விவசாயத்தை சார்ந்து பதப்படுத்தும் தொழில்கள், மதிப்பு கூட்டு பொருட்கள், வேளாண்  சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவற்றின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கலாம்.

மேலும், முதலமைச்சர் இதற்கு முன்னரே விவசாயிகளுக்காக குரல் கொடுத்துள்ளார். நாடு வல்லரசு ஆகிறதோ இல்லையோ விவசாயிகளுக்கு நல்லதா அரசு மாற வேண்டும் என்று பல வருடத்திற்கு முன்னரே முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 எந்த ஒரு விஷயத்திலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறார் முதலமைச்சர். மேலும், நான் அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்பது ஆசை, நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விவசாயிகளுக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் செய்ய வேண்டும்  என்றும்,  அவருடைய எண்ணமும் நோக்கமும்  அதுவே ஆகும்.

வேளாண்மை துறை அமைச்சர் அனைத்து கருத்துக்களையும் குறிப்பெடுத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து என்னென்ன தேவையோ அதனை கட்டாயம் செய்வார் என உறுதி அளித்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருப்பதினால் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் என்னென்ன தேவைகளை கேட்கிறார்களோ அதனை வேளாண் துறை அமைச்சரிடம் கேட்டுப் பெற்றுத் தருவேன். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேவைப்படும் விஷயங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து கூடிய விரைவில் சரி செய்து தருகிறேன்.

 இன்று விவசாயிகள் வழங்கி இருக்கும் ஒவ்வொரு ஆலோசனைகளும் கவனமாக பதிவு செய்யப்பட்டு நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

விவசாய பாடத்தினை பள்ளி முதல் கல்லூரி வரை theory class-ஆக மட்டும் இல்லாமல் practical class-ஆக அமைக்க வேண்டும் என கல்வித் துறை அமைச்சரிடம் பேசி பெற்றுத் தருமாறு வேளாண் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்மை-உழவர் நலத்துறை முனைவர் பொ.சங்கர், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை இயக்குநர் முனைவர் J.விஜயராணி, சர்க்கரை துறை ஆணையர் இரா.கண்ணன், வேளாண்மை துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளிதரன், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள்  மரு.ம.சுதாகர் (காட்பாடி), மு.ம.வினோத்கண்ணன் (வேலூர்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), தாஹிரா (ராணிப்பேட்டை), மரு.ஜி.கபில் (சோளிங்கர்), எஸ்.எம்.சுகுமார் (ஆற்காடு), அபிஷேக் (போளூர்), எஸ்.தியாகராஜன் (செங்கல்பட்டு), மரு.எம்.எஸ்.ரவி (பொன்னேரி), கணேஷ்குமார் (செஞ்சி), மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், இணை இயக்குநர் (வேளாண்மை துறை) ஸ்டீபன்ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.