• காட்பாடி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஆட்சியர் ஆய்வு.

·        காட்பாடி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

        உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சி  தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி, சர்க்கார் தோப்பு, பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ-மைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வஞ்சூர் அரசினர் மேல்நிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க பள்ளி தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தினார். பின்னர் பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறை கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து தாராபடவேடு நகர்ப்புற சுகாதார மையத்தை  பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது சுகாதார மையத்தில் உள்ள மருந்து மற்றும் மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி தாய்மாருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் சேனூர் ஊராட்சி, எல்.ஜி.புதூர் கிராமத்தில் ரூ.16.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் சேனூர் ஊராட்சி, எல்.ஜி.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், காட்பாடி உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், குடிநீர் வசதி, குளிர்பதனகிடங்கு வசதி மற்றும் கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு, வியாபாரிகளிடம் காய்கறி விற்பனை குறித்து கேட்டறிந்தார். இன்று காட்பாடி உழவர் சந்தைக்கு 145 விவசாயிகள் வருகை புரிந்துள்ளனர். அவ்விவசாயிகளால் 11.63 லட்சம் மதிப்புள்ள 25.02 டன் கய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தரைக்கடை அமைத்துள்ள விவசாயிகளுக்கு மேற்கூரை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும்  உழவர் சந்தையினுள் TANWA மகளிர் குழு நடத்தும் உணவகத்தில் காற்றோட்டத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து காட்பாடி ஒர்த் அறக்கட்டளையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறசிந்தனையற்ற குழந்தைகளுக்கான தசை சிகிச்சை பயிற்சி மையத்தை பார்வையிட்டார். மேலும் மாற்று திறனாளிகளால் செயல்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தை பார்வையிட்டார். மாற்றுத்திறனாளி  மாணவர்களின் திறமைகளை கேட்டறிந்து பாராட்டினார். பின்னர் மாணவர்களுக்கு   புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரி கிராமங்களுக்கிடையே பாலாற்றின் குறுக்கே ரூ.90.66 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கட்டுமான பணிகளை  பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காரணாம்பட்டு அரசினர் மேல்நிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஹாக்கி விளையாட்டு போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களை பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு தேவையான  விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கூடங்கள்  போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிடங்கு 3700 மெ.டன் கொள்ளளவு கொண்டது. கிடங்கில் உள்ள அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை பொருட்களின்  இருப்பு குறித்தும், பொருட்களின் தரத்தினையும்  ஆய்வு செய்தார்.  இந்த கிடங்கின் மூலம் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 166 நியாய விலை கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து கரிகிரி கிராமம், கசம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் பால குடும்ப கிராம பண்ணை இல்லத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முதியோர்கள் மற்றும் குழந்தைகளிடம் குடிநீர், உணவு, இருப்பிட வசதி ஆகிய வசதிகள் கேட்டறிந்தார். பின்னர் இல்லத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு  செய்தார்.

பின்னர் வேலூர் மாநகரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.102.63 கோடி மதிப்பில் 7.4 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலூர் வட்டச் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வட்ட சாலை பணிகளானது தாராபடவேடு, காட்பாடி, கண்டிபேடு மற்றும் கரிகிரி ஆகிய இடங்களில் அமையவுள்ளது.

                இந்த ஆய்விற்கு பின்னர் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.3000/-வீதம் ரூ.6000/- மதிப்பிலான காதொலி கருவிகளும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலியையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு பட்டா ஆணையினையும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்  வழங்கினார். 

                தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடி வட்டம், கல்புதூரில் அமைந்துள்ள சமூக நீதி மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்து, மேலும் பொது அறிவை வளர்த்து கொள்ள தினசரி நாளிதழ், நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.  இவ்விடுதியில் உள்ள நூலகம், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, மேலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.ராமசந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா,  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.எஸ்.ராம்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், நுகர்பொருள் வாணிப கிடங்கு  மண்டல மேலாளர் விஜயலட்சுமி, துணை மேலாளர் ராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், நெடுஞ்சாலை துறை  கோட்ட பொறியாளர் தனசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து,  செயற்பொறியாளர் ரமேஷ்குமார், உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் செல்வம், நிர்வாக இயக்குநர் சீனிவாசமணி, துணை பொது மேலாளர் மைக், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.