• வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்ட பணிகள் ஆய்வு.

·        வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு  பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு.

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, வேலூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு  பகுதிகளில் ஒருங்கிணைந்த  மறுவாழ்வு சேவை மையம், சாலை பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, பேர்ணாம்பட்டு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அடிப்படை வசதிகள், பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை, உபகரணங்கள், மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட உள்ள சேவைகள் குறித்தும், மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் ஒருங்கிணைந்த மையம் அமைந்துள்ளதா எனவும்  கேட்டறிந்தார்.

தொடர்ந்து வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சி, வார்டு எண்.17, பூங்கா வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-26-ன் கீழ்  அமைக்கப்பட்டு வரும்  சிமெண்ட் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பூங்கா வீதியில் 62.50 மீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.  மேலும் 119.50 மீட்டர் நீளம் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேர்ணாம்பட்டு நகராட்சியில்  தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ் ரூ.121.00 இலட்சம் மதிப்பீட்டில் 35 சாலைகள்  (3.294 கி.மீ நீளம்) அமைக்கும்  பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேற்படி அனுமதி வழங்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-26 சாலை பணியில் பேர்ணாம்பட்டு நகராட்சியில் அனுமதி வழங்கப்பட்ட 35 சாலைகளில், 34 சாலைகள் சிமெண்ட் சாலைகள் மற்றும் 1 சாலை தார் சாலையாகும். 34 சிமெண்ட் சாலைகளில் 28 சிமெண்ட் சாலைகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  மீதமுள்ள 6 சிமெண்ட் சாலை மற்றும் 1 தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் அனைத்தும் 10-08-2026-க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1958 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 9 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியினை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

பின்னர் குடியாத்தம் வட்டம், செட்டிக்குப்பம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏரியானது நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  செட்டிக்குப்பம் ஏரியின் கொள்ளளவு 12.71 மி.க.அடி மற்றும் பரப்பு 30.60 ஹெக்டர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த நீர்நிலைகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுத்து செல்ல முதலமைச்சர் ஆணை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து செட்டிக்குப்பம் ஏரியில் வண்டல் மண் வழங்குவது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்.  ஏரியில்  வண்டல் மண் எடுப்பதற்கு 7 பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள ஊசிபோடும் அறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளின் பதிவுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறையில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் வருகை பதிவேடு, மகப்பேறு பிரிவு பதிவேடு, தினசரி வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் பிரசவ அறை, தாய்மார்கள் தங்கும் அறை, பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா,  மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க.செந்தில்குமார், பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையர் ஆர்.மோகன்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் தேவி, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார்    உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.