• பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி நூற்றாண்டு விழா.

·        பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் மரக்கன்றை நடவு செய்து, நூற்றாண்டு விழா ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும், ஓய்வு பெற்ற முன்னாள்  தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் கூலி தொழிலாளர் குழந்தைகளின் கல்வி நலன் கருதி 26.07.1926 அன்று லேபர் பள்ளியாக அப்போதைய சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி வேலூர் நகரப்பகுதிக்கு அருகில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது.

பெருமுகை பள்ளியானது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாகவும் இயங்கி வந்து தற்போது அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 2026-2027 கல்வியாண்டில் பெருமுகை தொடக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 39 மாணவர்களும், 63 மாணவியர்களும் என மொத்தம் 102 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 449 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  

2025-2026 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91  சதவீதமும், 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 93 சதவீதமும் தேர்ச்சி பெற்று  பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

இன்று உங்கள் பள்ளியோடு நூற்றாண்டு விழா நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும். ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் பாடங்களை கவனமாக கற்று நன்றாக படிக்கணும். பள்ளி பாடப்புத்தகத்தில் நான் படிச்ச ஒரு கதையை உங்களோட பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

ஒரு பட்டாம்பூச்சியோட வாழ்க்கை முறை பற்றி கதை அது. ஒரு இலையின் மீது முட்டையிட்டு, முட்டையிலிருந்து வெளிவரும் பட்டுப்புழு இலையை உணவாக எடுத்துக்கொண்டு,  தன்னை சுற்றி  ஒரு கூட்டை உருவாக்கி கொள்ளும்.  அந்த கூட்டிலிருந்து சில நாட்கள் கழித்து  அழகான பட்டாம்பூச்சி ஒன்று  வெளியே வரும்.

அப்பொழுது ஒரு சிறுவன் கூட்டிலிருந்து வெளியே வரும் பட்டாம்பூச்சி மிகவும் சிரமப்படுகிறது என்று நினைத்து அந்த கூட்டினை கிழித்து பட்டாம்பூச்சி வெளியே வர ஏதுவாக்கினார்.

ஆனால் வெளியே வந்த பட்டாம்பூச்சியால் பறக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த கூட்டிலிருந்து அது கஷ்டப்பட்டு வெளியே வந்தாதான் அந்த சிறகுகள் பறப்பதற்கு  பலம்பெற்று அழகாக பறக்கும். அதே போலேதான், நமக்கு வாழ்க்கையில் எதுவும் எளிதில் கிடைத்து விடும் என்ற எண்ணக்கூடாது.  நீங்கள் அனைத்து பாடங்களையும் கடினமான முயற்சியுடன், கவனம் செலுத்தி,   நன்றாக படித்தால் தான் வாழ்க்கையில் அனைவரும் ஒரு பட்டாம்பூச்சி போல அழகா வெற்றியோடு திகழ முடியும்.

ஆசிரியர் நாள்தோறும் நடத்தும் பாடங்களை அன்றே படிக்க வேண்டும். நீங்கள் படிக்கும் இந்த பள்ளி அதிகாரிகள், மருத்துவர்கள், இராணவ வீரர்கள் போன்ற பலரை உருவாக்கி இருக்கிறது. நீங்களும் எதிர்காலத்தில்  பெரிய  உயர்பதவிக்கு வந்து  உங்க வீட்டிற்கும், உங்க ஊருக்கும் பல சேவைகள் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எம்.கேசவன், வேலூர் வட்டாட்சியர் பழனி, பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.