• வள்ளிமலை வளரிளம் பெண்கள் சிறப்பு கிராம சபை கூட்டம்.
· வள்ளிமலை ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ச.வாசுகி தலைமையில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, கருத்துரை வழங்கினார்.
இக்கிராம சபை கூட்டத்தில் வளரிளம் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம், குழந்தை திருமணங்களை தடுத்தல் போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர், போக்சோ சட்டம் குறித்து மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர், குழந்தைகளுக்கான சீரான, சத்தான உணவு முறைகள் குறித்து காட்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், இளம் வயது கர்ப்பம் தவிர்ப்பது குறித்து மாவட்ட மகப்பேறு அலுவலர், அரசின் சார்பில் பெண்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர், பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியும், குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் வள்ளிமலை அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பல்வேறு விதமான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது
பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு பாதுகாப்பு, குழந்தை திருமணங்களை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சமூக நலத்துறையின் சார்பில் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்களின் வாயிலாக பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு விவரங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை முக்கியமான இரண்டு விஷயங்கள். பாதுகாப்பு மற்றும் கல்வி. கல்வி என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான விஷயம். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். ஒரு பழமொழி கூட உண்டு ஒரு ஆண் குழந்தைக்கு கல்வி கற்பிப்பது என்பது ஒரு தனிநபருக்கு கற்பிப்பது போன்றது. ஆனால் ஒரு பெண் பிள்ளைக்கு கல்வி வழங்குவது என்பது ஒரு சமுதாயத்தையே படிக்க வைக்க கூடிய ஒரு நிகழ்வு. எனவே பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியமானது. இதை பெற்றோர்களும் புரிந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு விதமான நலதிட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக சத்தான ஊட்டச்சத்து, பள்ளிகளின் பயிலும் போது பாதுகாப்பான சுகாதாரமான கல்வியை வழங்குதல், கல்வி ஊக்கமளிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை, அரசு பள்ளிகளில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுகிறது.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்கள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு அவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கான தேவைகள் என்ன என்பதை ஆலோசனை செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள மாணவிகளிடம் வகுப்புகள் முடிந்த பிறகு சிறிது நேரம் ஒதுக்கி ஆலோசிக்க வேண்டும். எனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படிப்பு ஒன்றே உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தும். எனவே எக்காரணம் கொண்டும் கல்வியை கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட சமூக நல அலுவலர் இரா.உமா, மாவட்ட மகப்பேறு அலுவலர் மரு.ரேணுகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் க.அஸ்வின் பிரசாத், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (காட்பாடி) பா.சுஜாதா, வழக்கறிஞர் மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழு எம்.காமராஜ், உதவி ஆய்வாளர் (சிங்கப்பெண் அதிரடிப்படை) சூர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ந.பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சா.செல்வி, ஊராட்சி மன்ற செயலாளர் கி.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment