• வேலூர் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.
· வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 அன்று தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
தமிழ் வளர்ச்சி துறையால் “தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18-ஆம் நாள் “தமிழ்நாடு நாள் விழா” மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத் துறை அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திட கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு நாளை நினைவுகூரும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 அன்று தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடத்தப்பெறும்.
பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10000/-உம், இரண்டாம் பரிசாக ரூ.7000/-உம், மூன்றாம் பரிசாக ரூ.5000/-உம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
முதன்மை கல்வி அலுவலரால் அளிக்கப்பெறும் பெயர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு “தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை“, பேச்சுப்போட்டிகளுக்கான தலைப்புகள் 1. நான் விரும்பும் தமிழ்நாடு, 2. அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, 3. இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, 4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, 5. வீரம் செறிந்த தமிழ்நாடு. குலுக்கல் முறையில் போட்டிக்கான தலைப்பு வழங்கப்படும். மேலும், போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி 0416-2256166 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment