• வேலூர் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


·        வேலூர் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

                வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, சோமநாதபுரம் கிராமத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) கால்நடைகளுக்கான ஒன்பதாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற முகாமில் மேல்பாடி ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் நாள்தோறும் 42 இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்  நடைபெற உள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.  மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.  பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும்.

பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் கோமாரி நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.

                எனவே வேலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1,67,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வரும் 01.07.2026 தொடங்கப்பட்டு 31.07.2026-ம் தேதி வரை 31  நாட்களுக்கு   இம்முகாம் நடைபெறவுள்ளது.

                கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு  வேலூர்  மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

               முன்னதாக காட்பாடி ஊராட்சி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, சின்னகீசகுப்பம் கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கால்நடை மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். கால்நடை மருந்தகத்தில் கால்நடை கழிவுகளை முறையாக கையாண்டு அப்புறப்படுத்த மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்.

இம்முகாமில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) (பொ) மரு.அந்துவன், உதவி இயக்குநர்கள் மரு.எஸ்.ரகு, மரு.டி.ராஜவேலு, மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்யானந்தம்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.