• பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு 26/09/2026 வரை அவகாசம்.
· வேலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட 26/09/2026 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - மாவட்ட வருவாய் அலுவலர்.
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதிழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம் பெற, அரசு துறைகளில் பணியில் சேர, பாஸ்போர்ட் மற்றும் விசா பெற இன்றிமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை பதினைந்து வருடங்களுக்குள் உரிய காலதாமத கட்டணம் ரூ.200/- செலுத்தி பதிவு செய்திடலாம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் அனுமதியின்படி
2010-ம் ஆண்டுக்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.
பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்கள் / கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, 26.09.2026 -தேதிக்குள் பெயரை சேர்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிடுவீர் என மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment