• வேலூர் விஐடி பல்கலைகழக 41-வது பட்டமளிப்பு விழா.

·         இந்தியாவை 'செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக' மாற்ற வேண்டும் - தில்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள். 

·         வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா.

     வேலூர்:  இந்தியாவை 'செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக' மாற்ற வேண்டும் என தில்லி முதல்வர் ரேகாகுப்தா வேண்டுகோள் விடுத்தார்.

    வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

     விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வர் ரேகாகுப்தா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி  பேசியதாவது:

     அரசும், பட்டதாரிகள் இணைந்து செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். தில்லி நகரம் சந்திக்கும் மாசு, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஐஐடி-யுடன் இணைந்து செயல்பட்டதால் தில்லி நகரத்திற்கு பல தீர்வுகள் கிடைத்தன.

   அதேபோல நீங்கள் வேலையில் சேரும்போது நகரத்தின் தீர்வுகளுக்காகவும், நாட்டின் புதுமைகளுக்காகவும் பணியாற்றிட வேண்டும்.

     செயற்கை நுண்ணறிவை வெறும் பயன்படுத்துபவர்களாக மட்டும் இருக்க வேண்டாம், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவை உருவாக்க வேண்டும்.

     பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 'இந்தியா ஏஐ மிஷனில்' பெருமளவில் முதலீடு செய்துள்ளது. செமிகண்டக்டர், கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, விண்வெளி, ட்ரோன், ரோபோட்டிக்ஸ், பயோடெக் என ஒவ்வொரு துறையிலும் முதலீடு செய்யப்படுகிறது.

     இந்தியா வெறும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துபவராக மட்டும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். இந்தியா செயற்கை நுண்ணறிவு உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்பதே நமது லட்சியம். இந்தியாவை 'செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக' மாற்ற வேண்டும்.

    இதுவே நாட்டிற்கும், மாநிலங்களுக்கும் நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

     அரசியல் அறிவியல் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மட்டுமே அரசியல் வந்துவிடாது. மக்களிடையே இருந்து தான் நடைமுறை பிரச்சினைகளைத் தீர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

   தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம், மன அழுத்தம் கொள்ள வேண்டாம். தோல்விகளுக்கான காரணத்தை கண்டறியுங்கள், அவற்றை புரிந்து கொள்ளுங்கள், அந்த தோல்விகளை தோற்கடியுங்கள். பிரச்சினையின் தீர்விலிருந்து விலகி செல்லாமல், உந்துதலோடு அதனுடன் இணைந்து செயல்படுங்கள். அப்போதுதான் வாழ்வில் மீண்டும் எந்த தோல்வியும் வராது.

   கடின உழைப்பு என்பது நம் அனைவருக்குமான மிக முக்கியமான பாதையாகும். எந்தவொரு நாடும் பெரிய நாடாக உருவாவதற்கு அதன் தயாரிப்புகளும், அதன் சொத்துக்களும்தான் காரணம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது அறிவுசார் சொத்துக்கள். அந்த அறிவுசார் சொத்துக்கள்தான் நீங்கள் அனைவரும்.

    நமது இலக்கு 'இந்தியாவில் தயாரிப்போம்', 'இந்தியாவில் முதலீடு செய்வோம்', 'இந்தியாவில் வடிவமைப்போம்' மற்றும் 'இந்தியாவில் பிராண்ட் செய்வோம்'  என்பதாக இருக்க வேண்டும்.

   இந்தியப் பொறியாளர்களின் திறமையை உலகம் பார்த்திருக்கிறது, அவர்களை ஏற்று கொண்டிருக்கிறது, ஆனால் இந்திய தொழில்நுட்பத்தின் வலிமையையும் உலகிற்கு காட்ட வேண்டும்.

     இவ்வாறு அவர் பேசினார்.

     விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியது:

   இந்தியா உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 30 சதவீதமாக உள்ளது. புதிய கல்வி கொள்கையில் 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

    ஆசியாவின் மற்ற நாடுகளுடன் நாம் போட்டியிட வேண்டும். தென்கொரியா 90 சதவீதத்துடன்,  ஜப்பான் 60,  சீனா 60-க்கு மேலாக உள்ளது. மலேசியா 40,  தாய்லாந்து 45 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளன.

    நாட்டில் சுமார் 1,400 பல்கலைக்கழகங்களும், 54,000 கல்லூரிகளும், 16,000 தனித்துவமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. சுமார் 4.5 கோடி மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

     ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க செய்வது அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகளின் கடமையாகும்.

        பொறியியல் துறையில் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால் மருத்துவம் துறையில் பின்தங்கியுள்ளோம்.

       இந்தியாவில் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உள்ளது. ஆனால் 1.30 லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன.

     இந்த 1,30,000 இடங்களை 22 லட்சம் மாணவர்களுக்கு எவ்வாறு பிரிப்பது என்பது நீட் தேர்வின் முக்கிய பணியாக உள்ளது. இதில் 2,000 முதல் 3,000 மட்டுமே காலியாக எஞ்சுகின்றன.

    இதனால் மருத்துவம் படிக்க 1 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர்.

     சீனாவில் 23,000 பேரும், ரஷ்யாவில் 18,000, பிலிப்பைன்ஸில் 15,000, கிர்கிஸ்தான் 10,000, பிரான்ஸ் 10,000, ஜார்ஜியா 7500,  இத்தாலி 5000, போலந்து 5,000, ஈரான் 3000, நேபாளம் 3000, வங்கதேசம் 9000 மாணவர்கள் என வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

    உலக சுகாதார அமைப்பின்  வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு 1,000 பேருக்கும் 1 மருத்துவர் இருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தவிர பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் 2,000 முதல் 2,300 மக்களுக்கு 1 மருத்துவர் என்ற அளவில் பற்றாக்குறை உள்ளது. இதை சரி செய்ய மருத்துவக் கல்வித்துறையில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

     நாட்டில் 840 மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும் 1.30 லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் ஒரு கல்லூரியில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 100 முதல் 150 ஆக உள்ளது.

     பிரிட்டனில் ஒரு கல்லூரியில் ஆண்டுக்கு 400 மாணவர்கள் வரையும், சீனாவில் 800 முதல் 1,200 வரை அனுமதிக்கிறார்கள். இந்தியாவிலும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் 1,000 மாணவர்களை அனுமதித்தால் 8 லட்சம் இடங்களை எட்ட முடியும். இதற்கு தகுந்த பேராசிரியர்களும் வசதிகளும் தேவை.

   அரசு பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே சில சிக்கல்கள் உள்ளன. தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. கேரளாவில் 13-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ளன.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆளுநரையும் அரசையும் ஒருங்கிணைத்து கல்வி துறை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் நலன் பாதிக்கப்பட கூடாது.

   உலக பொருளாதாரத்தில் 4-வது இடத்தில் இருந்த நாம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். உற்பத்தியை உயர்த்தி, கல்வியின் மூலமாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

     இவ்வாறு அவர் பேசினார்.

     டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கி மற்றும் நிதி துறை சேவைக்கான தலைமை தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அலுவலர் பாபு உன்னிகிருஷ்ணன் பேசினார்.

   பட்டமளிப்பு விழாவில் தில்லி முதல்வர் ரேகாகுப்தாவின் மகன் நிகுஞ்ச்குப்தா பட்டம் பெற்றார்.  அப்போது தில்லி முதல்வர் ரேகாகுப்தா மேடையின் கீழ் அமர்ந்து தனது மகன் பட்ட சான்றிதழை பெறுவதை கண்டு ரசித்தார்.

   விழாவில் இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்த 11,276 மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.  இதில் இளநிலை பிரிவில் 7359 பேரும், முதுநிலை பிரிவில் 3917 பேரும் அடங்குவர்.

   மேலும் 781 பேருக்கு பி.எச்டி. பட்ட சான்றிதழ்களும், 3 பேருக்கு ஒருங்கிணைந்த பிஎச்டி பட்ட சான்றிதழும் வழங்கப்பட்டன. கல்வியில் சிறந்து விளங்கி தரவரிசையில் இடம்பிடித்த 248 பேருக்கு சான்றிதழ்களும், 84 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

     முன்னதாக, பாக்டீரியபேஜ் மற்றும் தொற்று நோய்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தை, தில்லி முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்தார்.

     பட்டமளிப்பு விழாவில் விஐடி துணைதலைவர்கள் சங்கர்விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி, துறை முதன்மையர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா நாளை நிறைவு பெறுகிறது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.