• அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
· அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமிர்தி உயிரியல் பூங்கா, நாற்றங்கால் பண்ணை, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அணைக்கட்டு தாலுக்கா, அமிர்தி ஊராட்சியில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பூங்கா பராமரிப்பு, விலங்குகள் மற்றும் பறவைகளின் பராமரிப்பு, உணவு, நீர், கால்நடை மருத்துவம் முதலியவற்றை கேட்டறிந்தார். சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, பார்வையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், ஓய்வு கூடம், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், வன கால்நடை மருத்துவமனை, ஒலி – ஒளி அரங்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊர்வன இருப்பிடம் போன்ற முக்கிய உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்க்க வேண்டுமென பார்வையாளர்களுக்கு அலுவலர்கள் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு பல்லுயிர் பசுமை திட்டம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பணியாளர்களிடம் பணி நேரம், பணிகள், உதவித் தொகை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், துத்திக்காடு ஊராட்சி பொது மக்களிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்குகள், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, துத்திக்காடு ஊராட்சி தெள்ளை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களின் கற்றல் திறனைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாணவர்களின் கல்வி திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை, மாணவர்களின் வருகை, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தெள்ளை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளின் வருகைப்பதிவேடு, மருத்துவ முகாம், உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர், வேலூர் ஊராட்சி தொரப்பாடியில் உள்ள நியாய விலை கடையை பார்வையிட்டு, உணவு பொருள்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், வனச்சரக அலுவலர்கள் பிரபாகரன், முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வேலூர் வட்டாட்சியர் பழனி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment