• ஸ்ரீபுரம் பொற்கோயிலில் சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு.
· சித்த மருத்துவம் இந்தியாவின் தொன்மையையும் கலாச்சாரத்தையும் உலக அளவில் பறைசாற்றுகிறது.
· உலக சுகாதார நிறுவனமே நமது பாரம்பரிய மருந்துகளை கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.
· ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் அரவிந்த்குமார் பேச்சு.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம், பொற்கோயில் வளாகத்தில் பொற்கோயில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாரம்பரிய, தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டி சான்றுகள் வழங்கி கௌரவிக்கும் விழாவானது நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் திரளான பாரம்பரிய சித்த மருத்துவர்களும் பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதி நீதியரசர் அரவிந்த்குமார் பங்கேற்று குத்து விளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்து 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி கௌரவித்து சான்றுகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் அரவிந்த்குமார் பேசுகையில்,
நமது கல்வி முறை கலாச்சாரம் பண்பாடு தொன்மையானது. உலகிலேயே முதல் இரண்டு பல்கலைகழகங்களான நாளந்தா மற்றும் தக்க்ஷிலா ஆகிய இரண்டு பல்கலைகழகங்கள் நமது நாட்டில்தான் இருந்தது. 128 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து கல்வி பயின்று சென்றது வரலாறு உலகிற்கு நமது நாட்டின் புகழை கொண்டு செல்லும் முக்கிய பங்கை சித்த மருத்துவம் வகிக்கிறது.
தாய் குழந்தையின் வலியை போக்குவதை போல் நாடி அறிந்து சித்த மருத்துவர்கள் மக்களின் நோயை போக்கி உயிரை காத்து வருகின்றனர். இவர்களின் மருத்துவ பயன்களும் சேவையும் அயல்நாடுகளில் பெருமையாக பேசப்படுகிறது. (WHO) உலக சுகாதார நிறுவனமே பாரம்பரிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் பயன்கள், நன்மைகளை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். சித்த மருத்துவர்களாகிய நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கி மருந்துகளை அளித்து உயிர்களை காக்க வேண்டுமென பேசினார்.


Comments
Post a Comment