• வள்ளிமலை ஊராட்சி சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்.
· சுதந்திர தினத்தை முன்னிட்டு வள்ளிமலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் கோ.வாசுகி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அனைத்து ஊராட்சிகளிலும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. கிராம சபை கூட்டப்படுவதின் நோக்கம் ஆண்டின் வரவு செலவு விவரங்களை வெளிப்படை தன்மையாகவும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கவும், மேலும் கிராம ஊராட்சியில் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி, நூலக வரி, உரிமை கட்டணம், தெருவிளக்கு பராமரிப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்தல், பைப்லைன் பராமரிப்பு போன்றவை கிராம ஊராட்சியில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2026-27ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார (VB-GRAM (G)) திட்டத்தின் கீழ் தொழிலாளர் வரவு செலவு திட்டம் குறித்து விவாதித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-கிராம சபா கூட்டப் பொருள், கால்நடை பராமரிப்புத்துறை சுதந்திர தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு 2026, வேளாண்மைத் துறை சுதந்திர தின கிராம சபை கூட்டம் குறிப்பு 2026, இதர பொருட்கள் ஆகியவற்றை குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைவரும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் 125 நாட்கள் வேலைவாய்ப்பு என் உரிமை உறுதிமொழியை எடுத்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது
சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் பங்கேற்று உள்ளோம். நமது கிராமம் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். அரசின் சார்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் நமது கிராமத்தில் செயல்படுத்த நமது பங்குடன் அனைவரின் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைக்க செயல்பட வேண்டும். உதாரணமாக தூய்மை கிராமம் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரிப்பார்கள். அவற்றில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என நாம் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
பள்ளி செல்லாத குழந்தைகள் எவரேனும் இருந்தால் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த குழந்தை பள்ளிக்கு செல்ல அரசின் இலவச உதவி எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கான இலவச உதவி எண்களை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். நமது கிராமம் முன்னேற்றம் அடைய நாம் அனைவரும் நம்முடைய முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா, காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் வின்செண்ட் ரமேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment