• வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

  • வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 - விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 – விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தலைமையில் இன்று (28.08.2026) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators) மற்றும் கழிவு உருவாக்குபவர்களுக்கான விழிப்புணர்வு  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் பிரிவு 5-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் 01.04.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 குறித்து மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் கழிவு உருவாக்குபவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கழிவுகளை உருவாகும் இடத்திலேயே 4 வகைகளாகத் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி,

(1) உணவு மற்றும் சமையலறைக் கழிவுகளை மக்கும் கழிவுகளாகவும் (Wet Waste),

(2)காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள் உள்ளிட்டவற்றை மக்காத/உலர் கழிவுகளாகவும் (Dry Waste),

(3)டயப்பர், நாப்கின் உள்ளிட்டவற்றை சுகாதாரக் கழிவுகளாகவும் (Sanitary Waste),

(4)காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள், மின்குமிழ்கள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகளாகவும் (Special-Care Waste) தனித்தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினசரி 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை பயன்படுத்துவார்கள், 20,000 சதுர மீட்டருக்கு மேல்  உள்ள வளாகங்கள்,  தினசரி 100 கிலோவிற்கு மேல் கழிவு உருவாக்கும்

பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகத்திலேயே மக்கும் கழிவுகளை உரமாக மாற்றுதல் அல்லது உரிய கழிவு செயலாக்க முறைகளை மேற்கொண்டு, விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் swm.cpcb.gov.in இணையதளத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026-ன் கீழ் பதிவு செய்ய வேண்டிய கழிவு உருவாக்குபவர்கள் மற்றும் மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது நிறுவன விவரங்களை உரிய முறையில் பதிவு செய்து, விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறுதல், முறையற்ற வகையில் கழிவுகளை கொட்டுதல் மற்றும் தவறான அறிக்கைகளை சமர்ப்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது “Polluter Pays” என்ற அடிப்படையில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் சுற்றுச்சூழல் இழப்பீடு (Environmental Compensation) மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கழிவு சேகரிக்கப்படும் இடம் முதல் அதன் இறுதி செயலாக்கம் அல்லது அகற்றும் இடம் வரை கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கண்காணிப்பு முறைகள் பயன்படுத்தப்படும்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.

திடக்கழிவு மேலாண்மை என்பது வெறும் சுத்தம் செய்யும் பணி அல்ல. இது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒழுங்கு மற்றும் நிர்வாக திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய சேவை.

கழிவு உருவாவதை குறைத்தல், மூலத்திலேயே பிரித்துச் சேகரித்தல், மறுசுழற்சியை அதிகரித்தல், உயிர்ச்சத்து கழிவை உரமாக / எரிவாயுவாக மாற்றுதல், நிலத்தில் புதைக்கும் அளவை குறைத்தல், நகரங்களை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுதல் ஆகியவை  திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் 6 முக்கிய நோக்கங்கள் ஆகும்.  

கழிவுகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஈரக்கழிவு (பச்சை), உலர் கழிவு (நீலம்), சுகாதார கழிவு (சிவப்பு) மற்றும் சிறப்பு கவனிப்பு கழிவு (மஞ்சள்) ஆகும்.

100% வீடு தோறும் சேகரிப்பு, மைக்ரோ கம்போஸ்ட் மையங்கள் மூலம் பகுதி அடிப்படையிலான ஈரக்கழிவு செயலாக்கம், வள மீட்பு மையங்கள் மூலம் உலர் கழிவு மறுசுழற்சி, உணவுக் கழிவிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் பயோமீத்தனேஷன், பழைய குப்பை மேடுகளை சுத்தப்படுத்தும் பயோமைனிங் ஆகிய முறைகள் திடக்கழிவு மேலாண்மையில் பின்பற்றப்படுகிறது.

 

திடக்கழிவு மேலாண்மைக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது.  எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026-ஐ முறையாகப் பின்பற்றி, கழிவுகளை 4 வகைகளாகத் தரம் பிரித்து வழங்கி, தூய்மையான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான வேலூர் மாநகராட்சியை உருவாக்க பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.