• வேலூர் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும் இடங்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு சிலைகள் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு மேற்கொண்டு வேதி பொருட்களாலோ அல்லது சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் செயற்கை பொருட்களாலோ தயாரிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிலைகள் கரைக்கும்போது அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம். கரைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். பழமையான முறையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படுவதை ஊக்குவிக்கப்படல் வேண்டும். இவைகள் மட்டுமே எளிதில் நீரில் கரைந்து எவ்வித மாசினையும் ஏற்படுத்தாது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
வேதிப்பொருட்கள் பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்திட ஊக்கப்படுத்த வேண்டும்.
எளிதில் கரையாத வேதிப்பொருட்கள் கொண்ட வர்ணப்பூச்சுகளால் ஆன விநாயகர் சிலைகளினால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் கேடுகள், நீர்நிலை மாசுபடுதல் குறித்து பொதுமக்களிடையே மதத்தலைவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
சிலை ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே வைக்க அனுமதிக்க வேண்டும். சிலைக்கு பாதுகாப்பு அளிக்க சிலை அமைப்பாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் (பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்). கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் சிலை அமைப்பாளர்களின் பணியினை கண்காணிக்க வேண்டும். மேற்படி சிலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா சிலை கரைக்கும் வரை வருவாய் கோட்ட அலுவலர்கள் குற்றவியல் நிர்வாக நடுவர்களை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். மண்டல அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் சிலை ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்வுகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் காவல்துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலை கரைக்கும் இடங்களை முன்னதாகவே பிற துறை அலுவலர்களுடன் கூட்டுத் புலத்தணிக்கை மேற்கொண்டு, சாலை வசதி / ஒளி வசதி/ தடுப்புகள் / சிலை கரைக்க போதிய தண்ணீர வசதி ஆகியன ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிலைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி பெறப்படும் மனுக்களின் மீது பல்வேறு துறையினரின் தடையில்லாச் சான்று பெறுவதில் சிலை அமைப்பாளர்களுக்கு உள்ள சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு வருவாய் கோட்ட அலுவலர்கள் ஒற்றை சாளர முறையை பின்பற்ற வேண்டும்.(இதற்கான அலுவலர்கள் நியமனம் செய்து செயல்முறை ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்)
சிலைக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஊர்வலத்தில் நிர்ணயிக்கப்பட்ட பாதையையே பயன்படுத்த வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். சிலை ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை கரைக்கும் போது உடனிருந்து பாதுகாப்பு பணிகளை கவனிக்க வேண்டும். சிலை ஊர்வலம் முடிந்த பின்பு, சிலைகள் கரைத்த பின்பு அமைப்பாளர்கள் திரும்பிய பிறகே காவலர்கள் பணியிலிருந்து செல்ல வேண்டும்.
சிலைகள் கரைக்கும் போது உடனிருந்து எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவில் மீட்புக் குழுவினர் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் வைத்திருக்க வேண்டும்.
சிலைகள் கரைக்கும் இடங்களில் தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். சிலைகளை கரைத்த பின்னர் கூட்டத்தினர் கலைந்து செல்லும் வரை சம்பவ இடத்திலிருந்து பணிகளை கவனிக்க வேண்டும். சிலை கரைத்த பின்பு ஏற்பட்ட கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிலை கரைக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ குழுவினரை தேவைக்கேற்ப பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
சிலை வைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள் ஒலி பெருக்கிகள் ஆகியவற்றிற்கு மின் இணைப்புகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் மின் இணைப்புகளுக்கு சேதம் ஏற்படாமலும் தேவைப்படும் நேர்வில் மின் நிறுத்தம் செய்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள நீர்நிலைகளில், பொதுமக்கள் நீரில் இறங்கா வண்ணம் நீர்நிலையை சுற்றி போதிய தடுப்புகளை அமைக்கவும், விநாயகர் சிலை கரைக்கப்படவுள்ள இடத்தில் மேடைப்பலகை அமைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பதிவு செய்யப்பட்டுள்ள லாரிகள், மினி லாரிகள், டிராக்டர்களில் மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பங்கேற்பாளர்கள் செல்லும் வாகனமானது மோட்டார் வாகன சட்டம், 1988 ன் விதிகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், விநாயகர் சிலைகள் மாட்டு வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்படுவது அனுமதிக்கப்படாததாலும், ஊர்வலத்தில் பங்குபெறும் வாகனங்கள் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு எடுத்துச் செல்லப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விழா குழுவினர்கள்/மாநகராட்சி ஆணையர்/நகராட்சி ஆணையர்கள்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடன் கூட்டம் நடத்தி கூட்ட நடவடிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். மண்டல அலுவலர்கள் தொடர்புடைய வட்டங்களில் விழா குழுவினர் மற்றும் காவல் துறையினருடன் கூட்டம் நடத்தி கூட்ட நடவடிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் பிரச்சினைக்குரிய நபர்களுடன் அமைதி கூட்டம் நடத்தி உறுதி மொழி பெற்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட வட்டங்களுக்கான மண்டல அலுவலர்கள் சிலை ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் சிலை கரைக்கும் இடங்களை புலத்தணிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
காவல் துறை, உள்ளாட்சி துறை, நீர்வள ஆதார துறை,மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஆகிய துறைகள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதை மற்றும் கரைக்கும் இடங்களில் போதிய அளவில் பணியாளர்களை நியமனம் செய்து அதற்கான ஆணையை சமர்ப்பிக்க வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து சிலை செய்யும் இடங்களை ஆய்வு செய்து சிலைகள் உரிய விதிமுறைகளின்படி வேதிப் பொருட்கள் கலக்காமல் செய்யப்படுகின்றதா என்று உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை மீறி சிலை செய்வோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிலை கரைக்க பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடமிருந்து உரிய தடையில்லாச் சான்று பெறப்படவேண்டும். வருவாய் கோட்ட அலுவலர்கள் அவர்களது கோட்டத்தில் வட்டம் வாரியாக நிர்வாக நடுவர்களை நியமனம் செய்து அதற்கான செயல்முறை ஆணைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
வேலூர் மாநகராட்சி ஆணையர் சதுப்பேரி ஏரி சிலை கரைக்கும் இடத்தையும் இதர வட்டங்களில் நகராட்சி / உள்ளாட்சி துறையினர் சிலை கரைக்க போதிய வசதி செய்து தர வேண்டும்.
எனவே பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment