• குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.
· குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், இலவச அவசர சிகிக்சை ஊர்தி (108), அரசு யுனானி மருத்துவ பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், இலவச அவசர சிகிக்சை ஊர்தி (108), அரசு யுனானி மருத்துவ பிரிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சி, கொட்டமிட்டா துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அருகிலிருக்கும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் முறைகள், மருத்துவ பணி நேரம், நோயாளியின் வருகை பதிவு, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளிகொண்டா அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவரிடம் பொதுமக்களின் வருகை விவரம், முதலுதவி, சிகிச்சை முறைகள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் மருத்துவரின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளிகொண்டா அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவப் பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், வருகை பதிவேடு, மருந்துகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து இலவச அவசர சிகிச்சை ஊர்தியை (108) பார்வையிட்டு ஆய்வு செய்து, ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளதா என கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.
பின்னர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வேப்பங்கால் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இல்லந்தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளரிடம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அனைத்து வீடுகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பராமரிக்குமாறும், தண்ணீரை மூடி வைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment