• வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் கூட்டம்.

 

  • வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர்
    தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட்-2026-ம் மாதம் முடிய இயல்பாக 279.7 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 145.5 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான அளவைக் காட்டிலும் 48% குறைவு. இதற்கு காரணம் உலக அளவில் நிலவும் ”எல் நினோ” பாதிப்பு ஆகும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல் நினோ பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இயல்பைவிட குறைவாக பெய்யும் எனவும், வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் 2026ம் மாதங்களில் எதிர்பாராத விதமான அதிகப்படியான மழை பொழிவானது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்படி அதிகப்படியான மழை பொழிவினை எதிர்கொள்ளும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த 2025-ம் ஆண்டில் பெய்த மழையினை கணக்கில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 27 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மிதமாக பாதிக்கப்பட கூடிய பகுதிகளாக (Medium) 8-ம், குறைவாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக (Low) 19-ம் உள்ளன. வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிக மற்றும் மிகஅதிக அளவில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் ஏதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 766 முதல் நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.  (ஆண்கள் -701, பெண்கள்-65)

வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள், நிவாரண மையங்களின் விவரங்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்களின் விவரங்களை TNSMART இணைய தளத்தில்  அனைத்து வட்டாட்சியர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பேரிடர்களின் போது தங்க வைக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 36-நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 36 நிவாரண முகாம்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு பல துறை அலுவலர்கள் அடங்கிய வட்ட அளவிலான மண்டல குழுக்கள் (Inter Departmental Zonal Teams) 6-குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் வருவாய்த் துறையில் உள்ள ஒரு துணை ஆட்சியர் தலைமையில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மின்சார துறை, பொது சுகாதார துறை உள்ளிட்ட 11 துறைகளை சார்ந்த அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழுவினர் பருவமழை காலங்களின்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வட்ட அளவிலான குழுக்களை போன்றே 20 உள்வட்ட அளவிலான மண்டல குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்  தெரிவித்ததாவது.

பருவமழை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், பல துறை அலுவலர்கள் அடங்கிய மண்டல குழுவினருடன் இணைத்து மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய செஞ்சிலுவை சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தன்னார்வலர்கள் கொண்டு Disaster Response Guards–களை அமைக்க வேண்டும். இது குறித்து தங்கள் பகுதியில் உள்ள மேற்கண்ட தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு Disaster Response Guard-ல் இணைய விருப்பமுள்ள தன்னார்வலர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.  

பருவமழை காலங்களில் காற்று மற்றும் மழையினால் மரங்கள் விழும்போது அவற்றை வெட்டி அப்புறப்படுத்தவும், பருவமழை காலங்கள் அல்லாத நேரங்களில் மரம் நடுவதற்காகவும் கண்டறியப்பட்டுள்ள முதல் நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருக்க  வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள், கைபேசி நிறுவனத்தினர் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்களுடன் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடத்தி, அவர்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தேவையான அளவு எரிபொருள்களை கையிருப்பில் வைத்து கொள்ளவும், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரின் கோரிக்கையின் பேரில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

மேற்படி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, பால் மற்றும் மளிகை பொருட்கள், துணிகள் ஆகியவை முறையாக வழங்கப்பட வேண்டும். இவைகளில் உணவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். பால் பொருட்களை ஆவின் நிறுவினத்திடமிருந்து கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், அவர்களுக்கு தேவையான மருந்து வசதிகள் ஆகியவை வழங்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்திருக்க வேண்டும்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களும், மழைநீர் செல்லும் கால்வாய்களும் உடனடியாக தூர்வாரப்பட வேண்டும். அதே போன்று நகராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள கால்வாய்களும் நீர்நிலைகளும் தூர்வாரப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினர், நகர்ப்புறங்களில் புதியதாக உருவாகியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காதவாறு இருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொது சுகாதாரத் துறையினர் பருவ மழை காலங்களுக்கு மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பில் வைத்துகொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் நோய் தொற்று ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவர்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்படி ஆய்விற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மிக அவசர பிரிவு ஆகியவற்றில் போதிய அளவு மின்சார வசதி இருப்பில் உள்ளதையும் (Power Backup),  போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் உள்ளதையும், போதிய அளவு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான டீசல்கள் கையிருப்பில் உள்ளதையும், தீயணைப்பு கருவிகள் உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் வெள்ள பாதிப்பினால் தரைதளம் பாதிக்கப்படும் போது, அங்குள்ள நோயாளிகளை முதல் தளத்திற்கு மாற்றுவதற்கு போதிய அளவு முதல் தளத்தில் இடவசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

மழை காலங்களில் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரினேஷன் செய்தல் மற்றும் கொசு மருந்துகள் அடித்தல் போன்ற பணிகளை அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்.

வட்ட அளவிலான மண்டல குழுக்கள் (IDZT) பொது சுகாதார துறை ஒருங்கிணைப்பாளருடன் நகர் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராம பகுதிகளிலும் பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். (டெங்கு நோய் தாக்கம் குறைப்பதற்காக).

பொதுப்பணி துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழி தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகள் மற்றும் அடைப்புகளை சீரமைத்து, மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக பராமரிக்க வேண்டும்.

பருவமழை காலங்களில் பெய்யும் மழையினால் மழைநீர் தேங்கும் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களால் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை உடனடியாக சீர்படுத்திடுமாறும், மழைநீர் தேங்குவது குறித்து சம்மந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து மழைநீரை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பருவமழை காலங்களில் மழை வெள்ளத்தால் கால்நடைகள் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளை, மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தங்க வைப்பதற்கு ஏதுவான இடங்களை கண்டறிந்து இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.  கால்நடைகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்து துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை பேரிடர் காலங்களில் மக்களை வெளியேற்றும் பணிக்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். புயல் காலங்களில், புயல் கரையை கடக்கும் 6-மணி நேரத்திற்கு முன்பு பேருந்துகள் இயக்கம் செய்வதை நிறுத்தவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் புயல் / மழை / வெள்ளக் காலங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் பெயர்ந்து விழுவதால் உடனடியாக அகற்றும் வண்ணம் மின் அறுவை இயந்திரங்கள், புல்டோசர் போன்ற அனைத்து வகையான கனரக இயந்திரங்களையும் வைத்துள்ள பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் 1000மீ அளவிற்கு மேல் மற்றும் கீழ் புறங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி சீரமைக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பெய்த மழையின் போது குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு வட்டங்களில் அதிகப்படியான மரங்கள்/மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. எனவே மேற்படி இரண்டு வட்டங்களிலும் உள்ள முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்கள்/மரக்கிளைகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மேநீர் தேக்கத் தொட்டிகளிலும் முழு அளவில் நீரினை நிரப்பி வைத்திருக்க வேண்டும். மேற்படி மேநீர் தேக்கத் தொட்டிகளில் முறையாக குளோரினேஷன் செய்வதை கண்காணித்திடல் வேண்டும். அதிக மழையின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால் கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் பைப்புகளில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் கண்காணித்திடல் வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் பருவமழை துவங்குவதற்கு முன்னரே நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை உயர்த்தி அமைத்திட வேண்டும். இப்பணியினை சிறப்பு இனமாக கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழை பருவகாலம் தொடங்குவதற்கு முன்னரே மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் சிறப்பு முகாம்கள் மூலம் மின்வழித்தடங்களுக்கு மேல் வளர்ந்துள்ள மரக்கிளைகளை முற்றிலும்  அகற்ற வேண்டும். மழை பெய்யும் நாட்களில் மின்துண்டிப்பு தொடர்பாக பொதுமக்கள் மின்சார வாரியத்தினை தொடர்பு கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

தீயணைப்பு துறையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கான அவர்களது துறையின் மூலம் உள்ள அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்களை பருவமழை காலங்களின் போது வெப்ப பாதிப்புகளிலிருந்து மீட்பது தொடர்பாக அனைத்து முதல் நிலை பொறுப்பாளர்களுக்கும் உள்வட்ட அளவில் ஒத்திகை பயிற்சியினை (Mock Drills) நடத்தி, முதல்நிலை பொறுப்பாளர்களை தயார்படுத்திட வேண்டும்.  அனைத்து வட்டாட்சியர்களும் சம்மந்தப்பட்ட தீயணைப்பு அலுவலர்களை அணுகி, தங்கள் வட்டங்களில் உள்வட்ட அளவில் ஒத்திகை பயிற்சியினை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து நாள் மற்றும் நேரத்தினை தீயணைப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மழை வெள்ளம் தொடர்பான ஒத்திகை பயிற்சியினை (Mock Drills) நடத்திட வேண்டும்.  

ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பேரிடர் காலங்களின் போது பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்குமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மையினை சரிபார்க்கப்பட வேண்டும். மழை காலங்களில் மாணவ / மாணவிகளை வகுப்பறைகளில் உள்ள சுவிட்ச் போர்டுகள் மற்றும் மின்சாதனங்களை தேவையின்றி தொடுவதையும் இயக்குவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். மாணவ / மாணவிகள் பள்ளி வளாகத்தில் மழை நேரங்களில் வெளியே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏதேனும் குப்பைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி மேற்கூரைகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தினுள் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் பிற காலி இடங்களில் மழைநீர் தேங்காதவாறு  தற்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் அனைத்து பள்ளிகளின் சாவிகளையும் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வசம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் அல்லது ஊராட்சி செயலர் வசம் ஒப்படைக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் பருவமழை காலங்களில் பொழியும் மழையின் காரணமாக பாதிக்கப்படும் பயிர்கள் குறித்து சம்மந்தப்பட்ட  அலுவலர்கள் உடனுக்குடன் கணக்கெடுப்பு நடத்தி, முறையாக நிவாரண தொகை வழங்கிட ஏதுவாக அரசிற்கு பிரேரணைகளை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

பருவமழை காலங்களில் மழை வெள்ளத்தால் கால்நடைகள் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக தாழ்வான வெள்ளத்தால் பாதிப்பிற்குட்படும் பகுதிகளில் உள்ள கால்நடைகளை மேடான பகுதிகளில் கொண்டு சென்று தங்க வைப்பதற்கு ஏதுவான இடங்களை தேர்வு செய்திடல் வேண்டும். மேலும் மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் கைவசம் வைத்திருக்க வேண்டும். புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை போதிய அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பேரிடர் காலங்களின் போது பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் உள்ள மின்சாதன பொருட்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். மழை காலங்களில் மின்சாதன பொருட்களை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உபயோகப்படுத்த தேவையான அளவிற்கு ஜெனரேட்டர்கள் மற்றும் டீசல்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் மாணவ  /  மாணவியர்களை அவசியமின்றி மைதானத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமணங்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள மழை மானிகளின் (SRG-12, ARG-22, AWS-2) தற்போதைய நிலை குறித்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்படி தானியங்கி மழைமானிகள் மற்றம் தானியங்கி வானிலை நிலையங்கள் ஆகியவை அமைந்துள்ள இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் செடிகொடிகளை அவ்வப்போது அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

வட்டாட்சியர்கள் தங்கள் வட்டத்திற்குட்பட்ட பலதுறை அலுவலர்கள் அடங்கிய வட்ட அளவிலான மண்டல குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்களை கொண்டு ஒரு வாட்ஸ் அப் குருப் ஆரம்பித்த தினசரி நிலையினை கண்காணிக்க வேண்டும். வட்டாட்சியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஜே.சி.பி, டிராக்டர் மற்றும் பொக்லைன் ஆகியவற்றின் உரிமையாளர்கள் விவரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இரண்டு மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைத்திருப்பதை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்  உறுதி செய்ய வேண்டும்.

உதவி இயக்குநர் (ஊராட்சி), உதவி இயக்குநர் (பேருராட்சி), நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தங்கள் துறை முலம் உள்ள ஜே.சி.பி இயந்திரம்,  மரம்வெட்டும் கருவிகள்,  கழிவுகளை வெளியேற்ற தேவையான லாரிகள், வெள்ளப் பகுதிகளில் மீட்பதற்கான படகுகள், நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், தேங்கும் நீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட விநியோக அலுவலர் மற்றும் இணை பதிவாளர் (கூட்டுறவு துறை) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் ஆகியோர் உணவு தாணியங்கள்,  மண்ணெண்ணெய் மற்றும் கோணிப்பைகளையும், எல்.பி.ஜி, டீசல் போன்றவற்றையும் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை கண்காணிக்கவும்,  உறுதி செய்யவும் வேண்டும்.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரி, மழை வெள்ளங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாவண்ணம் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள இரயில் பாதைக்கு கீழ் செல்லும் பாலங்களில் (R.U.B) மழை பொழிவினால் அதிக அளவில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினரும் தங்கள் எல்லைக்குட்பட்ட இரயில் பாதைக்கு கீழ் செல்லும் பாலங்களில் தேங்கும் மழைநீரினை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணி துறையை சார்ந்த அலுவலர்களை புயல் / சூறாவளி சமயங்களில் மக்கள் தங்குமிடங்களிலும், பள்ளி கட்டடங்களிலும், சமுதாய அரங்குகளிலும் மற்றும் தனியார் திருமண மண்டபங்களிலும் ஆய்வு மேற்கொண்டு அவை நல்ல முறையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் வகையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணி துறை, மின்சார துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, தீயணைப்பு துறை, பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தனியாக ஒரு அலைபேசி இருக்க வேண்டும் . மேற்படி கட்டுப்பாட்டு அறையில் 01.10.2026 முதல் 31.12.2026-ம் தேதி வரையில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருக்குமாறு உத்திரவு பிறப்பிக்க வேண்டும். மேற்படி உத்திரவு நகலினை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மழையினால் ஏற்படும் சேத விவரங்கள் குறித்து தகவல்களை உடனுக்குடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை தீர்க்கும் பணியினையும் கட்டுப்பாட்டு அறையில் நியமனம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். 

                மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் வடகிழக்கு பருவமழை 2026 பருவகாலத்தில் இயற்கை இடர்பாடுகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் வேல்முருகன்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.