• வேலூரில் கம்பன் விழா.
· வேலூரில் கம்பன் விழா - பல தலைமுறை கவிஞர்களுக்கு கம்பர் ஒரு அமுதசுரபி - வி.ஐ.டி. துணைதலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு.
வேலூர், பல தலைமுறை கவிஞர்களுக்கு கம்பர் ஒரு அமுதசுரபி என கம்பன் கழக விழாவில் வி.ஐ.டி துணைதலைவர் ஜி.வி. செல்வம் பேசினார்.
கம்பன் விழா:
வேலூர் டவுன் ஹாலில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் 48-வது ஆண்டு கம்பன் விழா, அமைப்பின் நிறுவனர் எஸ்.என்.குப்புசாமி முதலியார் நூற்றாண்டு விழா ஆகியவை நடைபெற்றது.
விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவரும், வி.ஐ.டி. துணைதலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி பேசுகையில்,
உலகில் உள்ள பல்வேறு இலக்கியங்களில் தலைசிறந்தது கம்பராமாயணம்.
உலகை வென்ற மனிதர்கள் தவறு செய்து திருந்த வேண்டும் என்பதை உணர்த்தவே, ராமனும், அனுமனும் கூட தலா ஐந்து முறை தவறு செய்ததாகக் கம்பர் தனது காவியத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.
கம்பரின் வரிகள் தற்கால திரையிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தியின் செல்வ செழிப்பை கம்பர் வர்ணித்ததே, கண்ணதாசனின் "எல்லாரும் எல்லாம் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலைமை வேண்டும்' என்ற பாடலுக்கு அடிப்படையாகும்.
நதியில் நீர் இல்லாதது நதியின் குற்றமல்ல என்று ராமன் கூறியதையே, கண்ணதாசன் "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமல்ல' என்று எழுதினார். கவிஞர் வாலியின் "சீதையை பிரிந்தது ராமன் தான், தூதாகச் சேர்ந்தது அனுமன் தான்' என்ற வரிகளுக்கும் கம்பரே முன்னோடி.
சுமார் 10,000 பாடல்களைத் தனி ஒருவராகபாடி முடித்த கம்பர், பல தலைமுறை கவிஞர்களுக்கு ஒரு அமுதசுரபியாகத் திகழ்கிறார். வேலூர் கம்பன் கழகம் என்றும் அவரது புகழைப் பாடும் என்றார்.
சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு எஸ்.என்.குப்புசாமி முதலியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகையில்,
வேலூர் கம்பன் கழகம் என்றாலே குப்புசாமி முதலியார்தான் நினைவுக்கு வருவார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கம்பன் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர். தமிழுக்காகவும், கம்பனுக்காகவும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு வியக்கத்தக்கது.
குப்புசாமி முதலியாருக்கு பகைவர்கள் எவருமே இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறுவயது முதலே யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற எண்ணத்துடனும், பொறுமையோடும், பெருந்தன்மையோடும் வாழ்ந்தார். இந்த இரு குணங்களும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொறுமையும், பெருந்தன்மையும் வந்துவிட்டால், நாட்டில் அரசியல் சச்சரவுகளோ ரகளையோ இருக்காது.
எதையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வெற்றி பெறும் அவரது வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு விழாவுக்குள் குப்புசாமி முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்றார்.
விழாவில் இரா.மாது, புலவர் மா.ராமலிங்கம் ஆகியோர் பேசினர். வேலூர் கம்பன் கழக செயலர் வெ.சோலைநாதன், வணிகர் சங்க மண்டலத் தலைவர் ரா.ப.ஞானவேலு, ஆடிட்டர் நிர்மல்குமார், டாக்டர் இனியன் சமரசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஐடா அறக்கட்டளை தவசீலன் நன்றி கூறினார்.

Comments
Post a Comment