• பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம், குடியாத்தம் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு.
- பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஏரியை தூய்மைப்படுத்தல், சாலை பணி, நீர் குளம் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்க ரூ.1.75 இலட்சம் மதிப்பில் பாதுகாப்புப் பெட்டகம் (safety locker) அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், டி.டி.மோட்டூர் ஊராட்சி, கப்ராபாத் ஏரியை தூய்மைப்படுத்தவும், ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்து, பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், கீழ் ஆலத்தூர், ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சி தலைவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். கல்லூரி மாணவர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை நேரடியாக கண்டு, அவற்றின் தரம், விலை, சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் விருப்பங்கள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். மகளிர் சுய உதவி குழு பெண்கள் தங்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் சுய தொழில் மேற்கொண்டு தங்களது தயாரிப்புகளை பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று சந்தைப்படுத்தி, வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக உருவாகி, குடும்ப மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களிடம் பெண்களின் தொழில் முனைவுத் திறனை அறிமுகப்படுத்துதல், நுகர்வோர் விருப்பங்கள் மற்றும் நவீன சந்தை தேவைகளை அறிந்து கொள்ளுதல், உற்பத்தி, தரம் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்துதல், மகளிரின் வருமானம் மற்றும் பொருளாதார சுயசார்பை மேம்படுத்துதல், மாணவர்களிடம் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவித்தல், உள்ளூர் தயாரிப்பு-உள்ளூர் சந்தை-பெண்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை இச்சந்தையின் முக்கிய நோக்கங்களாகும்.
பின்னர் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கல்லப்பாடி ஊராட்சியில் அயோத்திதாசர் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சாலையின் தரம், அளவீடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், செம்பேடு ஊராட்சி, பங்கரிசிகுப்பத்தில் VB-GRAMG திட்டத்தின்கீழ் ரூ.13.33 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் குளம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இ.இம்மானுவேல் ஜெய்கர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் தேவி, பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, கனகராஜ், பள்ளி தலைமையாசிரியர் சுபாஷினி உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment