• வேலூர் மாநகராட்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு.
- வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி, அம்மா உணவகம், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நல வாழ்வு மையம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டறந்தாங்கல் பகுதியில் ரூ.250 இலட்சம் மதிப்பில் 1560 மீ நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணி வண்டறந்தாங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை உள்ள வண்டறந்தாங்கல் மெயின் ரோடு (035001R005), இந்திரா நகர் 2-வது குறுக்குத் தெரு (035001R0843), இடுகாடு சாலை (035001R0837) மற்றும் பெரியபட்டரை தெரு (035005R181) ஆகிய பகுதிகளில் மூடி அமைப்புடன் கூடிய மழைநீர் வடிகால் (RCC Storm Water Drain with Cover Slab) கட்டப்பட்டு வருகிறது. இக்கால்வாய் அமைக்கப்படுவதன் மூலம் வண்டறந்தாங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேங்குதல் ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், போதுமான நீர்வெளியேற்றத் திறன், சீரான சரிவு மற்றும் தேவையான கட்டமைப்பு உறுதித்தன்மையுடன் புதிய RCC மழைநீர் வடிகால் மூடியுடன் அமைக்கபட்டு வருகிறது.
வடிகாலின் உள் அகலம் 0.70 மீட்டர், ஆழம் 0.90 மீட்டர் ஆகும். நீரியல் கணக்கீட்டின்படி தேவையான அதிகபட்ச நீர்வெளியேற்றம் 0.44 கன மீட்டர்/வினாடி ஆகும். முன்மொழியப்பட்ட வடிகாலின் கணக்கிடப்பட்ட நீர்வெளியேற்றத் திறன் சுமார் 0.47 கன மீட்டர்/வினாடி ஆக இருப்பதால், வடிவமைக்கப்பட்ட நீர் வெளியேற்றத்தை போதுமான அளவில் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அலுமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அலுமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை, ஊட்டச்சத்து நிலை போன்ற விவரங்களை கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் வேலூர் மாநகராட்சி, அலுமேலுமங்காபுரம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவரிடம் பொதுமக்களின் வருகை விவரம், முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் மருத்துவரின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 24, மூலக்கொல்லை பகுதியில் 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ரூ.46 இலட்சம் மதிப்பில் கைவிடப்பட்ட, நோயுற்ற, முதிய மற்றும் பலவீனமான விலங்குகளுக்கான தங்குமிடத்தின் (Animal Shelter) கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, உதவி இயக்குநர் (கனிம வளம்) செல்வி பிரியா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப் குமார், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, வேலூர் வட்டாட்சியர் பழனி, மாமன்ற உறுப்பினர் அன்பு உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment