• பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் ஆய்வு.
- கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், வேலூர் மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேலூர் மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, சத்துவாச்சாரியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட மைய சமையற்கூடத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு சமைக்கப்பட்ட காலை உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு, வேலூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டம் விரிவாக்கம் செய்வதன் மூலம் கூடுதலாக 9,722 குழந்தைகள் பயன் பெறுவர். தற்போது 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 110 பள்ளிகளைச் சேர்ந்த 7,748 குழந்தைகள் இக்காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். தற்போது இத்திட்ட விரிவாக்கத்தின் கீழ், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உள்ள 36 பள்ளிகள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 29 பள்ளிகள் என மொத்தம் 65 பள்ளிகளைச் சேர்ந்த 9,722 குழந்தைகள் கூடுதலாகப் பயன்பெற உள்ளார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 175 பள்ளிகளை சேர்ந்த 17,470 குழந்தைகள் பயனடைவர்.
இக்குழந்தைகளுக்கு தேவையான உணவு சி.எம்.சி. காலனி (CMC Colony) அருகில் உள்ள மைய உணவகத்திலிருந்தும் மற்றும் காந்தி நகர் மேற்கில் உள்ள மைய உணவகத்திலிருந்தும் தயார் செய்யப்படுகிறது. இதுவரை 9 வழித்தடங்கள் (Routes) மூலமாகப் பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விரிவாக்கம் செய்யப்படும் பள்ளிகளுக்கு உணவைக் கொண்டு சேர்க்கக் கூடுதலாக 2 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 11 வழித்தடங்கள் மூலம் உணவுகள் பாதுகாப்பாக விநியோகம் செய்யப்படவுள்ளன.
இத்திட்ட விரிவாக்கத்திற்காக சமையல் கூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். உணவை சமைக்க தேவையான பெரிய அளவிலான பாத்திரங்கள், சமையலறையின் தூய்மை மற்றும் பிற கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு விநியோகிக்கத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் புதிய காய்கறிகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட்டது. உணவு தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளில் ஈடுபடவுள்ள சமையல் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் முன்னேற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதை தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எவ்வித சிரமமுமின்றி, மிகச் சிறந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்ய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பின்னர் வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள நீர் நிலைகளில் ஒன்றான சதுப்பேரி ஏரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment