• வேலூர் சிஎம்சி 11-வது சர்வதேச செல், மரபணு சிகிச்சை மாநாடு.
வேலூர் மாவட்டம், வேலூர் சிஎம்சி-ன் Centre for Stem Cell Research (CSCR) சார்பில் 11-வது சர்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு (CGTCON 2026), அக்டோபர் 8 முதல் 10-ஆம் தேதி வரை சிஎம்சி, பாகாயம் வளாகத்தில் நடைபெறுகிறது.
BRIC–Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem), பெங்களூரு மற்றும் Christian Medical College (CMC), வேலூர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக செயல்பட்டு வரும் CSCR இந்த மாநாட்டை நடத்துகிறது.
மாநாட்டிற்கு முன்னதாக, அக்டோபர் 8-ஆம் தேதி தொழில்நுட்பப் பயிலரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் பிரதான மாநாடு நடைபெறும். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில்துறை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
ஸ்டெம் செல் உயிரியல், மறுஉற்பத்தி மருத்துவம், செல் மற்றும் மரபணு சிகிச்சை துறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், மருத்துவ பயன்பாட்டிற்கு புதிய சிகிச்சைகளை கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
இரத்த நோய்கள், கண் நோய்கள், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், நரம்பியல் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான புதிய சிகிச்சை அணுகுமுறைகள் குறித்தும், CAR-T, CAR-NK செல் சிகிச்சைகள், மரபணு திருத்தத் தொழில்நுட்பம், mRNA சிகிச்சை மற்றும் நோய் மாதிரியாக்கம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும்.
மரபணு சார்ந்த நோய்களுக்கான சிகிச்சைகள் மட்டுமின்றி, குறிப்பாக தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் மிகவும் அதிக செலவாக இருக்கும் சூழலில், இந்தியாவிலேயே இத்தகைய மேம்பட்ட சிகிச்சைகளை உருவாக்குவதன் மூலம் அவற்றை குறைந்த செலவில் வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் Harvard Medical School-ஐச் சேர்ந்த Christine Noel Duncan மற்றும் University of Pennsylvania-வைச் சேர்ந்த Bruce Levine ஆகிய சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக CSCR, ஸ்டெம் செல் மற்றும் மரபணு சிகிச்சை தொடர்பான அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. எலும்புகள் எளிதில் முறியும் Osteogenesis Imperfecta நோய்க்கான ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் ஹீமோபீலியா நோய்க்கான மரபணு சிகிச்சை தொடர்பான முக்கியமான மருத்துவ ஆய்வுகளையும் மையம் மேற்கொண்டுள்ளது.
CGTCON 2026 மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 9-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு, சிஎம்சி வேலூர் பாகாயம் வளாகத்தில் உள்ள Scudder Auditorium-ல் நடைபெறுகிறது. இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) முன்னாள் இயக்குநர் பேராசிரியர் Balram சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
செல் மற்றும் மரபணு சிகிச்சைத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் குறைந்த செலவிலான மேம்பட்ட சிகிச்சைகளை நோயாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

Comments
Post a Comment