• திருவலம் பணிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
· திருவலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, திருவலம் பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திருவலம் பேரூராட்சி E.B கூட்ரோடு, வார்டு 1-ல் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் புதிய மின் இணைப்புடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் பைப்லைன் விஸ்தரிப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவலம் பேரூராட்சி, சிவானந்தா நகர் மற்றும் மேட்டுப்பாளையம் பழைய காலனியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.12.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 1.5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் குளோரினேஷன் இயந்திரம் மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, திருவலம் பேரூராட்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை, எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், திருவலம் பேரூராட்சி, வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரமாக மாற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இயற்கை உரமாக மாற்றும் பணியில் அட்டை மடிக்கும் இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் அறைக்கும் இயந்திரத்தின் செயல்முறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திருவலம் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாய்மார்கள் பாலூட்டும் அறை, மாற்று திறனாகளின் பிரத்தியேக கழிவறை, பொது கழிவறையை ஆய்வு செய்து, பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், மழைநீர் தேங்காதவாறு பராமரிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, திருவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவர்களின் கற்றல் திறனைக் கேட்டறிந்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமையல் கூடத்தில் உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், திருவலம் பேரூராட்சி, செம்பவராய நெல்லூர், சுகர்மில், கார்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளைப் பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பொருட்களின் தரம் மற்றும் எடை அளவை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
தொடர்ந்து, திருவலம் பேரூராட்சியில் 3700 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகக் கிடங்கை பார்வையிட்டு, நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் இருப்பு பொருட்களின் தரம் மற்றும் எடை அளவை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சுவாதி, காட்பாடி வட்டாட்சியர் பாலசந்திரன், வட்டார வழங்கல் அலுவலர் லட்சுமி, செயல் அலுவலர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment