• கீ.வ.குப்பம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு.
- “ உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், கீ.வ.குப்பம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக கீ.வ.குப்பம் வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் கீ.வ.குப்பம் வட்டம், இலத்தேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும், மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவின் சுவை மற்றும் தரம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவிகளின் கற்றல் திறன், ஆசிரியர் கற்பிக்கும் திறன், பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கா வண்ணம் பராமரிக்குமாறு தலையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.1.98 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 7 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறைகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இலத்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களின் வருகை விவரங்கள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு, ஆய்வகத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, குடியாத்தம் வட்டம், இராமாலை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பட்டாசு உற்பத்தி ஆலையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், பட்டாசு உற்பத்தி மருந்துகள் வைப்பிடம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், பட்டாசு உற்பத்தி வகைகள் குறித்து கேட்டறிந்தார். பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தும் முறையை ஆய்வு செய்தார். பணியாளர்களிடம் பணி நேரம் குறித்தும், முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், உதவி இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், வேலூர்) பிரேம்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், தீயணைப்பு துறையினர், குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, கீ.வ. குப்பம் வட்டாட்சியர் சித்ரா, பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலி கிறிஸ்டி உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment