• குடியாத்தம், பள்ளிகொண்டா பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

  • குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

                வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், குடியாத்தம் நகராட்சி மற்றும் பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சி, அக்ராவரம் ஏரியின் உபரி நீர் பாதையிலிருந்து கவுண்டன்யா நதி வரை கான்கிரீட்டால் மூடு கால்வாய் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த அக்ராவரம் ஏரி மோர்தானா நீர்த்தேக்கத்தின் வலது பிரதான கால்வாயில் இருந்தும், நீர் பிடிப்பு பகுதியிலிருந்தும், கவுண்டன்ய நதியிலிருந்து வரும் கால்வாய் மூலமும் நீரை பெறுகிறது. அக்ராவரம் ஏரியில் நீர் நிரம்பி  உபரி நீர் வெளியேறும்போது  கால்வாய் ஏதும் இல்லாததால் 650 மீட்டர் நீளத்திற்கு பட்டா நிலங்களின் வழியே பாய்ந்து கவுண்டன்ய நதியில் கலக்கிறது.

தொடர்ந்து, அக்ராவரம் ஊராட்சி, கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே ரூ.9.30 கோடி மதிப்பில் சீவூர், தட்டப்பாறை முதல் முங்கப்பட்டு சாலை மீனூர் மலை கொல்லைமேடு வரை உயர்மட்ட பாலம் அமைப்பது  குறித்து  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை, ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றை கேட்டறிந்தார்.

பின்னர், அக்ராவரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியை பார்வையிட்டு, சத்துணவு சமையற்கூடத்தை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குப்பம் ஊராட்சியில் VB-G  RAM-G திட்டத்தின்கீழ் ரூ.14.08 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் குளம் அமைக்கும்  பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.  

அதனை தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1958 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 9 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், குடியாத்தம் நகராட்சியில் 46 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, நீர்வள துறை செயற்பொறியாளர் சோபனா, உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி துறை, பயிற்சி) யோகேஸ்வரி, செல்வி காவ்யா, குடியாத்தம் நகராட்சி ஆணையர் தனலட்சுமி, குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.