• வேலூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஆட்சியர் ஆய்வு.
- வேலூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி, அங்கன்வாடி மையம், பள்ளி, சிறப்பு முகாம் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் ஊராட்சி, மேல்மொணவூர் ஏரியில் சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், டி.டி.மோட்டூர் ஊராட்சி, காப்ராபாத் ஏரியில் கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து ஏரியின் கரையில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அதனை தொடர்ந்து, பேர்ணாம்பட்டு வட்டம், டி.டி.மோட்டூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது புறநோயாளிகள் வருகை விவரங்களை ஆய்வு செய்தார். பின்னர் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். சிகிச்சை பெறுபவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், டி.டி.மோட்டூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை, எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் சமையற்கூடத்தில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பேர்ணாம்பட்டு வட்டம், மொரசப்பல்லி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், மாணவர்களிடம் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் PVTG பழங்குடியினர் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இம்முகாமில் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஆயுஷ்மான் பாரத் PMJAY உள்ளிட்ட சேவைகள் குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க.செந்தில்குமார், நீர்வள துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் தேவி, குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செ.உத்திரகுமாரி செல்வம், டி.டி.மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் யு.அமிலா, பள்ளி தலைமையாசிரியர் அருள்மொழி உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment