• அணைக்கட்டு வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு.
- அணைக்கட்டு வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்தில் உயர்மட்ட மேம்பால பணி, டெங்கு தடுப்பு நடவடிக்கை, தொடக்க பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, ஒடுகத்தூர்-நேமந்தபுரம் சாலையில் ரூ.8.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாக முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அணைக்கட்டு வட்டம், கல்லுட்டை பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் இல்லந்தோறும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறியும் பணிகள், கொசு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள், லார்வா ஒழிப்பு மற்றும் புகை மருந்து தெளித்தல் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, ஒடுக்கத்தூர் பேரூராட்சி கல்லுட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களின் வருகை, கற்றல் திறன் ஆகியவற்றை கேட்டறிந்து, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காவண்ணம் பராமரிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு, பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், செல்வகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment