• நவம்பர் 1 உள்ளாட்சி தினம்.

·         நவம்பர் 1 உள்ளாட்சி தினம்.

·         வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர்  சிறப்பு பார்வையாளராக  கலந்து கொண்டார். 

நவம்பர் 1, உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக  கலந்து கொண்டார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். இதர பொருட்கள் குறித்து கிராம சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்ததாவது.

                உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை ஊராட்சியில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தில் அரசு தெரிவித்துள்ள முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இன்று நவம்பர் 1 உள்ளாட்சி தினம். இந்த கிராம சபை கூட்டத்தில் எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்து, அதன் பிறகு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக இந்த உள்ளாட்சி ஒரு அமைப்பு  உருவானது. இந்த தினத்தை இன்று நாம் அனைவரும் கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு கிராம சபையில் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறோம்.

                அதனால், கிராம சபையில் நாம் அனைவரும் பொதுவாக நமது ஊருக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம் மற்றும் சுற்றுசுவர் ஆகியவை வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கோரிக்கை வைப்போம்.     

            நான் முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூறியிருந்தேன். அரசிடமிருந்து நம் கிராமத்துக்கு என்ன வேண்டும் என்று கேட்பதை காட்டிலும், நாம் நமது கிராமத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நாம் கிராம சாபை கூட்டத்தில் விவாதிப்பது நமது கிராமம் மேலும் செழிப்பாக அமைய வழி வகுக்கும். நாம் நமது கிராமத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. அதைத்தான் நாம் முதலில் செய்ய வேண்டும். இங்கு நாம் குழந்தை திருமணம் பற்றி பேசியிருக்கிறோம்.

​       தாய்மார்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் இருந்தால், தாய்மார்களிடம் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூற வேண்டும். ஒரு பெண் கல்வியைக் கற்பது என்பது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு ஆண் கல்வி கற்றல் என்பது அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது ஒரு சமுதாயத்திற்கே பயன்படும். அதனால் நாம் இதுபோன்ற விஷயங்களை நிறைய கலந்துரையாட வேண்டும்.

           நம்ம மாவட்டத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் இருந்தால் அதைத்தான் நாம் மாற்ற வேண்டும். நாம் இந்த குழந்தை திருமணத்தை முற்றிலுமாகத் தடுக்கலாம். அரசு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட நீங்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வின் வேகம் அதிகம்.  நமது குழந்தைகளை ஏன் இவ்வளவு சீக்கரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அவர்களது கல்வி அவர்களை சமுதாயத்தில் நாளை நல்ல நிலையில் உயர்த்த வேண்டும். இது போன்ற ஒரு ஆரோக்கியமான விவாதத்தினை கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.

​ மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தற்போதைய காலநிலையில் மழை நீர் வரத்து குறைவாக இருப்பதால் ஏரிகளை தூர் வாரி, தூய்மைப்படுத்தி மழை நீர் சேமிப்பை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஒவ்வொருவரும் வீடு கட்டும் போது மழைநீர் சேகரிப்பு தொட்டியை வைப்பது அவசியம்.

            இது போன்ற மக்களுக்கு அத்தியவசியமான விவாதங்களை ஒவ்வொரு கிராம சபையிலும் தாய்மார்கள் கிராம மக்களிடம் அதன் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும். “நமது கிராமம், நமது பொறுப்பு” என்ற உணர்வோடு நாம் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சி தலைவர் கூறினார்.

                இக்கூட்டத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், பிரகாஷ், காட்பாடி வட்டாட்சியர் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஊராட்சி செயலாளர் வெங்கடரமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.  

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.