• உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி களப்பயணம்.


  • வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகல்வி துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கல்லூரி களப்பயணத்தை குடியாத்தம், கீழ்ஆலத்தூர் அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் 2025-2026-ம் கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு “கல்லூரி களப்பயணம்“ அழைத்து செல்லப்பட்டனர். இந்த கல்லூரி களப்பயணத்தின் அனுபவமானது மாணவர்களின் உயர்கல்வி குறித்த அச்சம் / குழப்பங்களை களைந்து உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கியது. மேலும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆர்வமூட்டல் சார்ந்து மாவட்ட ஆட்சியர்-ன் வழிகாட்டுதலில் உயர்கல்வி துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட இப்பெரும் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களின் மொத்த உயர்க்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இந்த கல்வியாண்டில் தற்பொழுது வரை 96 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளனர்.

இக்கல்வியாண்டிலும் 12-ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் கல்லூரி களப்பயணம் நடத்த திட்டமிடப்பட்டு, வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், நடுப்பேட்டை மற்றும் நெல்லூர்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சார்ந்த மாணவிகளை அபிராமி மகளிர் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டது-

இதனை தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள 66 அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 4,295 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் மற்றும் சட்ட கல்லூரிகள் போன்ற 14 கல்லூரிகளில் களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த கள ஆய்வில் கல்லூரியின் நூலகம், ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவு கூடம், வகுப்பறைகள் போன்றவைகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, கல்விசாரா நிகழ்வுகள் கலாச்சார கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், கூடுதல் பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், விளையாட்டு வசதிகள் மற்றும் செயல்பாடுகள் படிப்பு குறித்து அறிந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், செவிலியர் என தனித்தனி லட்சியங்கள் உள்ளன. அதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. உங்கள் லட்சியத்திற்கு ஏற்ப உங்களை இப்போதே தயார் செய்ய தமிழ்நாடு  அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் இது.

கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்தவர்களில் 98% பேரை உயர்கல்வியில் சேர்த்துள்ளோம். இந்த ஆண்டு 100% மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பதே இலக்கு. மதிப்பெண் எப்படி இருந்தாலும் கல்வியை ஒரு சுமையாக நினைக்காமல், அது உங்கள் வாழ்க்கைக்கான முதலீடு என்று நினைக்க வேண்டும்.

உயர்கல்விக்கான கல்வி கடன் வசதியை அரசு மூலம் செய்து தருவோம். அனைவரும் தயக்கமில்லாமல் உயர்கல்வி பயில வேண்டும். நீங்கள் படித்து பெரிய நிலைக்கு செல்வதன் மூலம் உங்கள் குடும்பத்தையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்.

குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரிகள் எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்தக்கூடாது. மேலும் சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவற்றை பார்வையிட விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம். அதற்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் மாணவிகள் தங்களுக்கு தேவையான உதவிக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலம் அணுகலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செந்தில்குமார்,  அபிராமி கல்லூரி நிறுவன தலைவர் கே.ஜோதிராம், கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சி.சுபாஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.